மஹாளய அமாவாசை: பேரூர் நொய்யல் ஆற்றில் தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை, பேரூர் நொய்யல் ஆற்றுப் படித் துறையில் பொதுமக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து சனிக்கிழமை வழிபட்டனர்.


மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை, பேரூர் நொய்யல் ஆற்றுப் படித் துறையில் பொதுமக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து சனிக்கிழமை வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் நீர் நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கோவை, பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை குவிந்தனர்.  
நொய்யல் ஆற்றில் புனித நீராடி அரிசி, காய்கறிகள், பழங்கள் மற்றும் எள் உள்ளிட்டவைகளை வாழை இலையில் படையலிட்டு பூஜை செய்து ஆற்றில் விட்டு முன்னோர்களை வழிபட்டனர். கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
தூய்மைப் பணியில் தன்னார்வலர்கள்:
மஹாளய அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் நூற்றுக்கணக்கான மக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்கு வந்திருந்தனர். தர்ப்பணம் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருள்களின் கவர்கள், காய்ந்த மலர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், இலைகள் உள்ளிட்டகழிவுகள் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்தன. இதை, கோவை குளங்கள் பாதுகாப்பு மற்றும் பேரூர் படித்துறை பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் சேகரித்தனர். 
மேலும், கழிவுப் பொருள்களை கண்ட இடங்களில் வீச வேண்டாம் என்றும், பிளாஸ்டிக் உள்ளிட்டபொருள்களை நீரில் விட வேண்டாம் என்றும் மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் வலியுறுத்தினர். நொய்யல் ஆறு மற்றும் கரைகளில் கழிவுகள் தேங்காத வகையில் உடனுக்குடன் அகற்றினர். தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையத்தில்...
மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் அனைத்து ஹிந்து சமுதாய சங்கத்தின் நந்தவனம் அமைந்துள்ளது. இங்கு கோவை, நீலகிரி,  திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர். சங்கத் தலைவர் சி.பொன்னுசாமி, செயலாளர் சந்திரமோகன், நிர்வாகிகள் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com