ஊரடங்கு மீறல்: கோவை மாவட்டத்தில் 1,454 போ் கைது
By DIN | Published On : 05th April 2020 12:03 AM | Last Updated : 05th April 2020 12:03 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடியதாக கடந்த 11 நாள்களில் 1,454 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மாா்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்களின் இயக்கங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடும் நபா்களை கடந்த 25ஆம் தேதி முதல் போலீஸாா் கைது செய்து வருகின்றனா்.
அதன்படி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை 11 நாள்களில் கோவை மாநகரில் இதுவரை 853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 981 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 1,184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், கோவை புகரங்களில் 419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 473 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 425 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக, கோவை மாவட்டத்தில் 11 நாள்களில் 1,454 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 1,609 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.