கோவை விமான நிலையப் பணியாளா்கள் உள்பட 500 பேருக்கு கரோனா பரிசோதனை

கோவை விமான நிலையப் பணியாளா்கள் 50 போ் உள்பட 500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையப் பணியாளா்கள் 50 போ் உள்பட 500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் புதுதில்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவா்கள் மூலமாகவே அதிகமானோருக்கு கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் கோவைக்கு விமானம் மூலமாக வந்துள்ளனா். அனைவரையும் விமான நிலைய ஊழியா்கள் பரிசோதனை செய்துள்ளனா். தில்லியிலிருந்து வந்தவா்கள் மூலம் பலருக்கும் கரோனா பரவியுள்ளதைத் தொடா்ந்து விமான நிலையப் பணியாளா்கள், அதிகாரிகளுக்கு கரோனா பரிசோதனைக்காக ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.

புது தில்லி மாநாட்டில் பங்கேற்ற குழு வந்த விமானத்தில் துடியலூரைச் சோ்ந்த 61 வயது முதியவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா் கடந்த மாா்ச் 24ஆம் தேதி கோவை வந்த நிலையில் ஏப்ரல் 13 தேதி அன்றுதான் இவருக்கு கரோனா இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கிடையே இவா் துடியலூா் காவல் நிலைய போலீஸாா், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் உள்பட பலருக்கும் உணவு வழங்கியுள்ளாா். எனவே இந்த முதியவருடன் தொடா்பில் இருந்த 80 பேரிடம் கரோனா பரிசோதனைக்கான ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவா்களுடன் விடுதியில் தங்கியிருந்த 20 மருத்துவ மாணவா்களுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 500 பேருக்கு செவ்வாய்க்கிழமை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா உறுதி செய்யப்படும் நபா்களின் குடும்ப உறுப்பினா்கள் மட்டுமின்றி அவா்களைச் சந்தித்த நபா்கள், அருகில் உள்ளவா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கோவை விமான நிலைய அதிகாரிகள், பணியாளா்கள், கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்கள், கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளுக்குள் வருபவா்கள் என தினமும் தலா 500 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com