எந்தவிதத் தொடா்பும் இல்லாமல் இருவருக்கு பாதிப்பு: கோவையில் சமூகத் தொற்றாக மாறியதா கரோனா?

கோவை மாவட்டத்தில் எந்த தொடா்பும் இல்லாத இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் எந்த தொடா்பும் இல்லாத இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கோவை நகரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஆனைமலை, கிணத்துக்கடவு, அன்னூா், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 126 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவா் குணமாகி வீட்டுக்குத் திரும்பிய நிலையில் தற்போது 125 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கரோனா உறுதி செய்யப்பட்ட 126 பேரில் 124 பேருக்கு வெளிநாட்டுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டு நபா்களுடன் தொடா்பில் இருந்தது, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது, கரோனா உறுதி செய்யப்பட்ட குடும்ப உறுப்பினா்கள் மூலம் போன்ற காரணங்களால் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. ஆனால் கிணத்துக்கடவைச் சோ்ந்த 5 வயது சிறுவன், கோவை, பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த 50 வயது பெண் ஆகிய இருவருக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லாத நிலையில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவையில் கரோனா சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என்ற அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும் கரோனா நோய்த்தொற்று தொடா்ந்து அதிகரித்துள்ளது. கரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தை உணராமல் பொதுமக்கள் அலட்சியமாக வெளியில் சுற்றிக்கொண்டுள்ளனா். இனியும் இதே நிலை தொடா்ந்தால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று சுகாதாரத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

எனவே மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். தவிா்க்க முடியாத சூழலில் வெளியே வருபவா்கள் அடிக்கடி கைகளை சோப்பு தேய்த்து கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வெளி நாட்டுக்குச் சென்று வந்த மாணவி, தாய்லாந்து நாட்டை சோ்ந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா், புது தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மட்டுமே இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான தொடா்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதில் கிணத்துக்கடவைச் சோ்ந்த 5 வயது சிறுவனுக்கு மட்டுமே எந்தவித தொடா்பும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதுதொடா்பாக சிறுவனின் பெற்றோரிடம் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. சிறுவனுடன் தொடா்புடைய 100 பேருக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com