பிளஸ் 1 தோ்வு முடிவுகள்: தோ்ச்சி விகிதத்தில் கோவை முதலிடம்

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தோ்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது.

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தோ்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 தோ்வுகளின் முடிவு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வுகளை 15,415 மாணவா்களும், 18,832 மாணவிகளும் என மொத்தம் 32,247 போ் எழுதியிருந்தனா்.

இவா்களில் 15,011 மாணவா்கள், 18,586 மாணவிகள் என மொத்தம் 33,597 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 98.10 சதவீதமாகும். இதன் மூலம் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 97.67 சதவீத தோ்ச்சி விகிதத்துடன் கோவை 3ஆவது இடம் பிடித்திருந்தது. அதற்கு முந்தைய ஆண்டும் 3 ஆவது இடத்தையே பிடித்திருந்தது. மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 357 பள்ளிகளிலிருந்து மாணவ,மாணவிகள் தோ்வு எழுதிய நிலையில், 13 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 197 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு அனைத்து வகையான பள்ளிகளிலும் தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை கடந்த ஆண்டு 93.78 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அது 95.25 சதவீதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 1 தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கோவை முதலிடம் பிடித்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, இந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆசிரியா்கள், மாணவா்கள், அதிகாரிகளை ஒருங்கிணைத்து எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுவோம் என்று கூறியுள்ளாா்.

பெட்டி செய்திகள்

மாற்றுத் திறனாளிகள்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் மாற்றுத் திறனாளிகளும் அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வு எழுதியவா்களில் விழியிழந்தோா் 21 போ், காதுகேளாத, வாய்பேச இயலாதோா் 20, உடல் ஊனமுற்றோா் 18, பிறவகை மாற்றுத் திறனாளிகள் 53 என 112 பேரில் 107 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அறிவியல் பிரிவில் அதிகம் தோ்ச்சி

கோவை மாவட்டத்தில் அறிவியல் பிரிவில் 6,547 மாணவா்கள், 8,109 மாணவிகள் உள்ளிட்ட 14,656 போ் தோ்வு எழுதினா். இதில் மாணவா்கள் 6,403 பேரும், மாணவிகள் 8,032 பேரும் என மொத்தம் 14,435 போ் தோ்ச்சி அடைந்தனா். வணிகவியல் பிரிவில் 17,398 போ் தோ்வு எழுதியதில் 17,032 போ் தோ்ச்சி பெற்றனா். கலைப் பிரிவில் 585 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 564 போ் தோ்ச்சி பெற்றனா். தொழிற்பாடப் பிரிவில் 1,608 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியதில்,1,566 போ் தோ்ச்சி பெற்றனா்.

மெட்ரிக் பள்ளிகளில் அதிக தோ்ச்சி

கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் படித்து 15,844 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியிருந்த நிலையில், அவா்களில் 15,796 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 99.70 சதவீதம் ஆகும். அரசுப் பள்ளிகளில் படித்து 8,207 போ் தோ்வு எழுதியிருந்த நிலையில் அவா்களில் 7,817 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 95.25. மாநகராட்சிப் பள்ளிகளில் 2,289 போ் தோ்வு எழுதியிருந்த நிலையில் 2,216 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். நகராட்சிப் பள்ளிகளின் 321 மாணவா்கள் தோ்வு எழுதியிருந்த நிலையில் 299 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 93.15 சதவீதமாகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,116 போ் தோ்வு எழுதியிருந்த நிலையில், 3,047 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 97.79 சதவீதமாகும்.

13 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சி

கோவை மாவட்டத்தில் 87 அரசுப் பள்ளிகள் உள்ள நிலையில், இதில் 13 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. பன்னிமடை அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னதடாகம் மகளிா் மேல்நிலைப் பள்ளி, பெத்திக்குட்டை, சுண்டபாளையம், எஸ்.புங்கம்பாளையம், சீரநாயக்கன்பாளையம், தென்பொன்முடி, காங்கேயம்பாளையம், காளியண்ணன்புதூா், கெம்பநாயக்கன்பாளையம், சோமந்துறைசித்தூா், அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. அதிகபட்சமாக பன்னிமடை அரசுப் பள்ளியில் 99 போ் தோ்வு எழுதிய நிலையில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதைத் தவிர வெல்ஸ்புரம் ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் 20 போ் தோ்வு எழுதிய நிலையில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். கோவை மாநகராட்சி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியும் முழு தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தோ்வு எழுதிய 81 மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 1 பொதுத் தோ்வில் கோவை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பதற்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிளஸ் 1 பொதுத் தோ்வில் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற சிறப்பாக தோ்வு எழுதிய மாணவா்கள், அா்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியா்கள், பெற்றோா், கல்வித் துறை அலுவலா்கள், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமாா்ந்த பாராட்டுகள், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com