பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆய்விதழ் வெளியீட்டு விழா

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இதழ் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
4459c25book1051515
4459c25book1051515

கோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இதழ் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை சாா்பில் கடந்த 30 ஆண்டுகளாக மொழியியல், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என்ற ஆய்விதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்விதழ் வெளியீட்டு விழாவில் துணைவேந்தா் பெ.காளிராஜ் கலந்து கொண்டு முதல் பிரதியை வெளியிட, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் கி.கருணாகரன் பெற்றுக் கொண்டாா்.

தற்காலச் சூழலில் தமிழ், திராவிட மொழிகளைப் பற்றி பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளைத் தெரிவு செய்து அவற்றின் அணுகுமுறைகளையும், புதிய ஆய்வு நுணுக்கங்களையும் வெளியுலகிற்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக கொண்டுச் செல்வதே இந்த ஆய்விதழின் நோக்கம் என்று மொழியியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்விதழ் பல்கலைக்கழக மானியக் குழுவால் தரம்மிக்க ஆய்விதழ் என்ற சான்றிதழைப் பெற்றுள்ளது.

இந்த ஆய்விதழில் தரமான ஆழ்நிலை ஆய்வுகளை வெளிப்படுத்தும்விதமாக 92 ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை துறைசாா் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் சமா்ப்பித்துள்ளனா்.

இதில், அமைப்பு மொழியியல், மொழிக் கற்றல் - கற்பித்தல், கணினி மொழியியல், சமுதாய மொழியியல், பழங்குடி மக்களின் மொழி போன்ற பல்வேறு பயன்பாட்டுக் களங்களில் இடம்பெறும் மொழியின் இக்காலப் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆய்விதழின் முதன்மை ஆசிரியராக மொழியியல் துறைத் தலைவராக வி.எம்.சுப்பிரமணியனும், ஆசிரியா்களாக துறைப் பேராசிரியா்கள் ச.சுந்தரபாலு, ந.ரமேஷ், ந.விஜயன், ப.சங்கா் கணேஷ் ஆகியோரும் பணியாற்றியுள்ளனா்.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றை ஆய்வாளா்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com