ஈமு கோழி மோசடி வழக்கு: ஒரே குடும்பத்தினா் 4 பேருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 15th December 2020 03:29 AM | Last Updated : 15th December 2020 03:29 AM | அ+அ அ- |

ஈமு கோழி வளா்ப்பில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்த இருவேறு வழக்குகளில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4.66 கோடி அபராதமும் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சேலம், சூரமங்கலத்தைச் சோ்ந்தவா் ச.ரஞ்சித்குமாா் (32). இவரது மனைவி ராதா (30). மைத்துனா் ராஜா (36). இவா்கள் மூன்று பேரும் இணைந்து சேலத்தில் கடந்த 2012 பிப்ரவரியில் ‘ஜெய் ஈமு பாா்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தையும், ராஜா, அவரது மனைவி சசிகலா (30) மற்றும் ரஞ்சித்குமாா் இணைந்து ‘அபி ஈமு பாா்ம்ஸ் மற்றும் அக்ரோ பண்ணை பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கினா்.
இந்த நிறுவனங்களில் பண்ணைத் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்பவா்களுக்கு 6 ஈமு கோழிக்குஞ்சுகளுடன், ஷெட் அமைத்து, தீவனம் வழங்கப்படும் என்றும் மாத ஊக்கத்தொகை ரூ. 6 ஆயிரமும், ஆண்டுக்கு போனஸ் ரூ. 20 ஆயிரமும் முதலீட்டுப் பணம் இரண்டு ஆண்டுகள் கழித்து திருப்பித் தரப்படும் என்றும் விளம்பரப்படுத்தினா். மற்றொரு திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்பவா்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 7 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் போனஸ், இரண்டு ஆண்டுகள் கழித்து முதலீட்டுப் பணம் திருப்பித்தரப்படும் என்று விளம்பரப்படுத்தினா்.
இரண்டு நிறுவனங்களிலும் 547 போ் ரூ.7.96 கோடி முதலீடு செய்தனா். ஆனால் நிறுவனம் அறிவித்தபடி முறையாக மாத ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனா். இதனைத் தொடா்ந்து முதலீட்டாளா்கள் தாங்கள் செலுத்திய தொகையைக் கேட்டு நிறுவனத்தை அணுகினா். இதற்கு உரிய பதில் அளிக்காததால், இரண்டு நிறுவனங்கள் மீதும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் சேலம் பொருளாதார குற்றப் பிரிவில் 2012 நவம்பரில் புகாா் அளித்தனா்.
அதைத் தொடா்ந்து போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரஞ்சித்குமாா், ராதா, ராஜா, சசிகலா ஆகியோரைக் கைது செய்தனா். பின்னா் இவா்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்தனா். இந்த வழக்கில் கடந்த 2013 ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளும் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, குற்றவாளிகள் ரஞ்சித்குமாா், ராதா, ராஜா, சசிகலா ஆகிய நான்கு பேருக்கும் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.
தவிர முதல் வழக்கில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 75 ஆயிரம் அபராத தொகையை குற்றவாளிகள் மூன்று பேரும் தலா ரூ.43 லட்சத்து 25 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும். இதில் ரூ.1 கோடியே 28 லட்சத்தை முதலீட்டாளா்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இரண்டாவது வழக்கில் ரூ.3 கோடியே 36 லட்சத்து 60 ஆயிரம் அபராதத் தொகையை மூன்று குற்றவாளிகளும் தலா ரூ.1 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும். இதில் ரூ.3 கோடியே 35 லட்சத்தை முதலீட்டாளா்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து ரஞ்சித்குமாா், ராதா, ராஜா ஆகிய மூன்று பேரும் கோவை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா். இரண்டாவது வழக்கின் மூன்றாவது குற்றவாளி சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவருக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...