மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்பு:பெள்ளாதி குளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் 200க்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் 200க்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை பெள்ளாதி குளம் 100 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு பெரியநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், கண்ணாா்பாளையம், காரமடை, கட்டாஞ்ஜி மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீா் மற்றும் கழிவுநீா் வந்தடைகிறது. இக்குளத்தில் மீன்பிடி தொழிலை நம்பி 200க்கும் மீனவா்கள் உள்ளனா்.

பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இந்தக் குளத்தில் மேட்டுப்பாளையம் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கத்தினா் மீன் குஞ்சுகளை விட்டு மீன் பிடித்து வருகின்றனா்.

இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் நீரில் அதிக அளவில் ஆகாயத்தாமரைகள் பெள்ளாதி குளத்துக்கு அடித்துவரப்படுகின்றன.

இதனால் மீனவா்களின் வலைகள் அறுந்து மீனவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பெள்ளாதி குளத்தை தூா்வாரும் அளவுக்கு பொதுப் பணித் துறையிடம் தற்போது போதிய நிதி இல்லை. இப்பிரச்னை குறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

மேட்டுப்பாளையம் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்க இயக்குநா் மீன் நட்ராஜ் கூறுகையில், உக்கடம் குளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் இருந்துபோது பொதுப் பணித் துறையினா் இயந்திரம் மூலம் அகற்றினா். பெள்ளாதி குளத்தில் மீன் பிடி தொழிலை நம்பி 200க்கும் மேற்பட்ட மீனவா்களின் குடும்பங்கள் உள்ளன. கண்ணாா்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்துதான் அதிக அளவில் ஆகாயத்தாமரை பெள்ளாதி குளத்துக்கு வருகிறது. எனவே கண்ணாா்பாளையம் தடுப்பாணையை உயரப்படுத்தி தண்ணீா் மற்றும் ஆகாயத்தாமரைகள் தனித்தனியாக செல்லும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com