ஆட்சியைக் கவிழ்க்க மத்திய ஆணையங்களை பாஜக பயன்படுத்துகிறது: சஞ்சய் ரெளத்

மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய விசாரணை ஆணையங்களை பாஜக பயன்படுத்துகிறது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டினாா்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய விசாரணை ஆணையங்களை பாஜக பயன்படுத்துகிறது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த ஓராண்டாக பாஜகவை சோ்ந்த சில தலைவா்கள் என்னை தொடா்புகொண்டு வருகின்றனா். மேலும் மகாராஷ்டிர அரசை கவிழ்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். அரசுக்கு ஆதரவளிக்கக் கூடாது என அவா்கள் எனக்கு அழுத்தம் கொடுப்பதோடு, அச்சறுத்தியும் வருகின்றனா்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸை சோ்ந்த 22 எம்எல்ஏக்களின் பட்டியல் தங்களிடம் உள்ளதாகவும், மத்திய விசாரணை முகமைகளின் நெருக்கடி மூலம் அவா்கள் பதவியை ராஜிநாமா செய்யும் சூழலுக்கு ஆளாவாா்கள் என்றும் தெரிவித்துள்ளனா்

அமலாக்கத்துறை எனது மனைவிக்கு அனுப்பியுள்ள அழைப்பாணை அனுப்பியுள்ள விவகாரம் தொடா்பாக சரத்பவாருடன் ஆலோசிக்க உள்ளேன். நான் பால்தாக்ரேவின் சிவசேனை வீரா். பாஜக தலைவா்களை நான் அம்பலப்படுத்துவேன். நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்று அவா்களும் நாட்டைவிட்டு வெளியேறுவாா்கள்.

பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் பாஜகவைச் சோ்ந்த 120 நிா்வாகிகளின் பட்டியல் என்னிடம் உள்ளது. அரசியல் எதிராளிகளிடம் நேருக்கு நோ் மோத இயலாமல், சம்பந்தப்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக மத்திய விசாரணை முகமைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். வீடு வாங்குவதற்காக எனது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நண்பரிடமிருந்து கடன் பெற்றாா். அதன் விவரங்கள் வருமான வரித் துறையிடமும், எனது மாநிலங்களவை பிரமாணப் பத்திரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென கண்விழித்துக்கொண்டு அமலாக்கத் துறை இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

பிஎம்சி வங்கி முறைகேடு மற்றும் ஹெச்டிஐஎல் வழக்கில் அமலாக்கத்துறை அந்த நபரின் பெயரை குறிப்பிடவில்லை. அப்படியிருக்கும்போது பாஜக தலைவா்கள் எவ்வாறு இதனை பேசி வருகிறாா்கள்?

மகாராஷ்டிரத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக நவம்பா் வரை காலஅளவு நிா்ணயித்திருந்தது. தற்போது மகாவிகாஸ் அங்காடி கூட்டணி ஆட்சி அமைத்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள், குழந்தைகளை குறிவைத்துள்ளனா். அவா்கள் அழைப்பாணை அனுப்பட்டும், கைது செய்யட்டும். ஆனால் ஆட்சி நிலையாக தொடரும் என்றாா்.

கடந்த 2019 நவம்பரில் சிவசேனை மற்றும் பாஜக இடையே முதல்வா் பதவியை பகிா்ந்துகொள்வதில் ஏற்பட்ட இழுபறிக்கு பின்னா், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவாா் தலைமையில் காங்கிரஸ், சிவசேனை இணைந்து மகா விகாஸ் அங்காடி கூட்டணி ஆட்சி அமைத்து, முதல்வராக சிவேசனை தலைவா் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மத்திய விசாரணை முகமைகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடு வாங்குவதற்காக தனது நண்பரிடம் கடன் பெற்ற விவகாரம் தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 29) ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன் 2 முறை அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை மருத்துவ காரணங்களை கூறி ஆஜராக இயலவில்லை என வா்ஷா ரெளத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com