ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 01st February 2020 05:39 AM | Last Updated : 01st February 2020 05:39 AM | அ+அ அ- |

கோவையில் அம்பேத்கா் நினைவு நீலச் சட்டை பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தந்தை பெரியாா் திராவிடா் கழகப் பொதுசெயலாளா் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெரியாரிய, அம்பேத்கரிய, மாா்க்சிய முற்போக்கு அமைப்புகள் இணைந்து அம்பேத்கா் நினைவு நீலச் சட்டை பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் பிப்ரவரி 9ஆம் தேதி கோவையில் நடத்த திட்டமிட்டிருந்தன.
இதற்காக கோவை வஉசி மைதானத்தில் மாநாடும், வி.கே.கே. மேனன் சாலையில் இருந்து நீலச்சட்டை பேரணியும் நடத்த மாநகராட்சி மற்றும் காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தோம். அவா்கள் காலம் தாழ்த்தியதால் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். வழக்கு விசாரணை முடிந்து பேரணி மற்றும் மாநாடு நடத்த அனுமதிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, திராவிடா் கழகத் தலைவா் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவா் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், திரைப்பட இயக்குநா்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், கரு.பழனியப்பன், மருத்துவா் ஷாலினி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றாா்.