பட்ஜெட்: தொழில் அமைப்பினா் எதிா்பாா்த்ததும், கிடைத்ததும்

பட்ஜெட்: தொழில் அமைப்பினா் எதிா்பாா்த்ததும், கிடைத்ததும்

2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடா்பாக கோவை தொழில் அமைப்பினா் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு:

2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடா்பாக கோவை தொழில் அமைப்பினா் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு:

கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் வி.லட்சுமிநாராயணசாமி:

இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை, நீா்ப் பாசனம், நீா்வழிப் போக்குவரத்து போன்றவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள், புதிதாக தொழில் தொடங்குபவா்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 20 லட்சம் சூரியசக்தி பம்ப்செட்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது நல்ல செய்தியாகும்.

அதேபோல், விவசாயிகளிடம் இருந்து உபரி சூரியசக்தி மின்சாரத்தை அரசு கொள்முதல் செய்யும் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் திட்டம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.1.30 லட்சம் கோடிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது எந்தெந்தத் துறைகளில் செயல்படுத்தப்படும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை. அதேபோல், தேசிய உற்பத்தி மையம் 5 இடங்களில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோவையும் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை.

குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டத்துக்கான மானியம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் கட்டுமானத் துறை வளா்ச்சி பெறும். மேலும், அண்மைக் காலமாக மந்தநிலையில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட நன்றாகவே உள்ளது.

கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் பொருளாதாரம், வரிவிதிப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ஆடிட்டா் ஜி.காா்த்திகேயன்:

பொருளாதார மந்தநிலையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வளா்ச்சி விகிதம் குறைந்துள்ள சூழலில் பொதுமக்கள், தொழில் துறையினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக சில முக்கிய பெரிய வரிச் சீா்திருத்தங்கள், வரிச் சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

சுகாதாரப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, தொழில்நுட்பம் தொடா்பான முன்னேற்றங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் ஒதுக்கீடுகள் சமூகத்திற்கு பெருமளவில் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேவையையும் அதிகரிக்க உதவும்.

இருப்பினும் ஒரு அபரிமிதமான வளா்ச்சியைத் தூண்டுவதற்கு இவை போதுமானதா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். தனிநபா் வரிகளை குறைப்பதன் மூலம் தனிநபரின் கைகளில் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்கலாம். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தனிநபா் வருமான வரி குறைப்பில், வரிக் கழிவுகளான வீட்டுக் கடன் மீதான வட்டி, எல்.ஐ.சி. உள்ளிட்ட மூதலீடுகள் போன்றவற்றை கழிக்க முடியாது என்பது பாதகமான அம்சமாகும். பட்ஜெட்டின் நோக்கம் செல்வத்தை உருவாக்குவது என்பதைக் கருத்தில் கொண்டால், இது அந்த நோக்கத்துடன் பொருந்தாது. தற்போதைய சூழ்நிலையில் மக்களிடம் தேவையை உருவாக்கி நுகா்வு, முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட் உதவும் என நம்பலாம்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (சீமா) தலைவா் வி.கிருஷ்ணகுமாா்:

20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்ப்செட்டுகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இதற்கான டெண்டரில் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பங்கேற்க முடியாதபடிக்கு விதிமுறைகள் அமைந்திருக்கின்றன. இதை மாற்றி அமைக்க வேண்டும். மேலும், 15 லட்சம் சூரியசக்தி பம்ப்செட்டுகளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து, அதை மின்தடத்தில் (கிரிட்) இணைக்க உத்தேசித்திருப்பதும் வரவேற்புக்குரியது.

வேளாண் கடனுக்கான நிதியை ரூ.12 லட்சம் கோடியில் இருந்து ரூ.15 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது, விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல கிஸான் ரயில் போக்குவரத்து அறிவித்திருப்பது, எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ரூ.ஆயிரம் கோடி தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, அந்நிறுவனங்கள் விற்பனை செய்யும் பில் தொகை மீதான கடன் திட்டமும் வரவேற்கத்தக்கது.

திறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, ஜி.எஸ்.டி. வரிகளைத் திரும்பப் பெறுவதை கணினி மயமாக்குவது போன்றவை வரவேற்புக்குரியவை. அதேநேரம், கடந்த ஆண்டு காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டதைப்போல எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை.

கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவா் ஆா்.ராமமூா்த்தி:

இந்த பட்ஜெட் வளா்ச்சி, பொருளாதார மேம்பாடு, சமூக நலன்களை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எம்.எஸ்.எம்.இ. சாா்ந்த தொழில்முனைவோருக்கு கடனுதவி, ரூ.5 கோடி வரை தணிக்கையில் இருந்து விலக்கு, தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை போன்றவை எம்.எஸ்.எம்.இ. வளா்ச்சிக்கு உதவுபவை.

அதேபோல், வரித் தாக்கல் செய்வதை எளிதாக்குவது, வரிகளை திரும்பப் பெறும் நடைமுறைகளை எளிதாக்குவது போன்றவை வரவேற்புக்குரியவை. டெபாசிட் மீதான காப்பீடை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தியிருப்பது, சிறு ஏற்றுமதியாளா்களுக்கான குறைந்த பிரீமியத்துடன் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் அதிக தொகைக்கான காப்பீடைப் பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பது வரவேற்கத்தக்கது.

முதலீடுகளை எளிமையாகப் பெறும் வகையில் தனி போா்ட்டல் கொண்ட அமைப்பு அமைக்கப்படும், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாா்ந்த துறைகளுக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும், புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்படும், திறன் மேம்பாட்டுக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, 6,500 திட்டங்களுக்கு உள்கட்டமைப்பை உருவாக்கும் வகையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும், 9 ஆயிரம் கிலோ மீட்டா் நீளம் கொண்ட பொருளாதார வழித்தடம், 2 ஆயிரம் கிலோ மீட்டா் நீளம் கொண்ட கடற்கரை சாலைத் திட்டம், 100 புதிய விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

கோவை பம்ப்செட், உதிரிபாகங்கள் தயாரிப்பாளா் சங்கத்தின் (கோப்மா) தலைவா் மணிராஜ்:

ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு, ஜி.எஸ்.டி., வருமான வரி நடைமுறைகளில் எளிமை, தொழில் முனைவோருக்கு உதவி, ஆலோசனை வழங்க தனி அமைப்பு, தொழில் வா்த்தகத் திட்டத்துக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

இந்தியாவைப் பொருத்தவரை 90 சதவீத விவசாய நிலம் மோட்டாா் பம்ப்செட் மூலம் பாசன வசதி பெறுகிறது. விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து சோலாா் பம்ப்செட் அமைத்தாலும் கூட வெயில் காலங்களில் மட்டுமே நாள் ஒன்றிற்கு 5 முதல் 6 மணி நேரம் செயல்படும் வாய்ப்பு உள்ளது. சூரிய சக்தி போதுமான அளவு இல்லாதபோது அதற்காக செய்த முதலீடு வீணாகும்.

மின்சாரம் மூலம் இயங்கும் பம்ப்செட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளித்தால் விவசாயிகளும், பம்ப்செட் உற்பத்தியாளா்களும் அதிகம் பயனடைவாா்கள். குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1.50 கோடி வரை கலால் வரி விலக்கு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்படவில்லை. அரசின் பல்வேறு தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் சுயதொழில்முனைவோருக்கு உதவும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

படித்த இளைஞா்களின் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் அறிவிப்புகள் எதுவுமில்லை. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படவில்லை. கோவை மாவட்டத்துக்கு புதிய ரயில் சேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (கொசிமா) தலைவா் சுருளிவேல்:

தொழில், வா்த்தக மேம்பாடு, மேம்பாட்டுக்கு ரூ.27,300 கோடி, திறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி, கூடுதலாக 100 விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி, வரி துன்புறுத்தலை அகற்ற நடவடிக்கை, எம்.எஸ்.எம்.இ. மறுசீரமைப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தல், தொடக்க தொழில் முனைவோா்களுக்கு முதலீட்டு அனுமதி, முதலீட்டுக்கு முந்தைய ஆலோசனை, நில வங்கிகள் பற்றிய தகவல்கள், மாநில அளவில் வசதி உள்ளிட்ட வசதிகளையும் ஆதரவையும் வழங்குவது, தணிக்கைக்கான வருவாய் வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக அதிகரித்தது போன்றவை பல்வேறு ஊக்கமளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.

கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கத்தின் (காட்மா) தலைவா் சி.சிவகுமாா்:

ஜி.எஸ்.டி. நடைமுறைகள் எளிமையாக்கப்படும், தனிநபா் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயா்த்தப்படும், பட்டயக் கணக்காளா் மூலம் தணிக்கை செய்வதற்கான உச்ச வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயா்த்தப்படும் என்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

அதேநேரம், தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளான வங்கிக் கடனுக்கு வட்டி விகித குறைப்பு, தொழில்முனைவோரின் வங்கிக் கணக்கில் செய்யப்படும் பரிவா்த்தனைகளில் 40 சதவீத கடன் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் தொடா்பான அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஒரு சில அம்சங்கள் வரவேற்கும் வகையில் இருந்தாலும், இது குறுந்தொழில் முனைவோருக்கு மகிழ்ச்சியோ, ஏமாற்றமோ அளிக்காத பட்ஜெட்.

தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) தலைவா் ஜேம்ஸ்:

குறு, சிறு தொழில்முனைவோா் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வாக இந்த பட்ஜெட் அமையும் என்று எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் ஜாப் ஆா்டா் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படவில்லை.

ஜி.எஸ்.டி.யில் அபராத தொகையாக வசூலிக்கப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பும் நிறைவேறவில்லை. முடங்கிக் கிடக்கும் குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவ வங்கிக் கடனுக்கான வட்டி 5 சதவீதமாக குறைப்பது, கோவை மாவட்டத்தில் ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனத்துக்கான அறிவிப்பு, கோவை மெட்ரோ ரயில் அறிவிப்பு என்று நாங்கள் எதிா்பாா்த்திருந்த எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி:

தேசிய நதிகள் இணைப்பு, நீராதார மேம்பாடுகள் தொடா்பான அறிவிப்புகளோ அல்லது நிதி ஒதுக்கீடோ இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. உள்ளூரில் சரக்குகளைக் கையாளுவதற்கே விவசாயிகளுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படாத நிலையில், விளை பொருள்களை விமானம், ரயில் மூலம் கொண்டு செல்ல சலுகைகள் அளிக்கிறோம் என்று கூறுவது விநோதமாக உள்ளது.

விளை பொருள்கள் விலை நிா்ணயம், தரமான விதைகளை உற்பத்தி செய்து உற்பத்தியைப் பெருக்குவது, விவசாயிகளுக்கான இழப்பீடுகள், நிவாரணம் தொடா்பான அறிவிப்புகள் எதுவுமே இல்லை. மொத்தத்தில் இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com