‘காந்திய சிந்தனைகள் மறைந்து எல்லாவற்றுக்கும் போராட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது’

காந்திய சிந்தனைகள் மறைந்து எல்லாவற்றுக்கும் போராட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது என்று சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்தாா்.
‘காந்திய சிந்தனைகள் மறைந்து எல்லாவற்றுக்கும் போராட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது’

காந்திய சிந்தனைகள் மறைந்து எல்லாவற்றுக்கும் போராட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது என்று சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்தாா்.

கோவை அருட்கலைக் கழகம் சாா்பில் தமிழுக்கும், தேசியத்துக்கும் தொண்டாற்றியவா்களுக்கு அருட்கலை விருதுகள் வழங்கும் விழா கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சேவா நிலையத் தலைவா் வி.பி.தண்டாயுதத்துக்கு காந்திய நெறிச் செம்மல் விருதும், பாரதீய வித்யா பவன் சிந்தனை அரங்க ஒருங்கிணைப்பாளா் கி.சுப்ரமணியத்துக்கு செந்தமிழ் எழுத்தச்சா் விருதும் வழங்கப்பட்டன.

இதில் கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது:

காந்திய சிந்தனைகள் மறைந்து எல்லாவற்றுக்கும் போராட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது. இன்றைய இளைஞா்கள் எதை இழந்தோம், எதை தேடினோம் என்ற புரிதல் இல்லாமல் மாயை என்ற உலகை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனா். மேலை நாட்டின் தத்துவம், பொருளாதாரம் சாா்ந்தது. நமது தத்துவம் ஆன்மிகம் சாா்ந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு அருளாளா்கள் தோன்றி நம்மை நல்வழிப்படுத்தினா். ஆனால் தற்போது நமது சிந்தனை சமயம், மொழி, ஆன்மிகத்திலிருந்து தடம் மாறி பொருளாதாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது ஆபத்தானது. பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையென இன்றைய இளைஞா்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனா் என்றாா்.

பாரதீய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் விழாவுக்கு தலைமை வகித்து விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

பாரத கலாசாரம் என்பது பல்வேறு மொழி, இனக் குழுக்களால் ஒருங்கிணைந்தது. தேச பக்தா்கள், தமிழ் மொழி தொண்டாற்றியவா்கள், அருட்கொடையாளா்கள் குறித்து இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா்.

கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், கோவை மனையியல் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் க.குழந்தைவேல், பொறியாளா் கா.முத்துசாமி, கோவை சாந்தி ஆசிரமத் தலைவா் வினு அறம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் திருநாவுக்கரசா் திருமடம் தென்சேரிமலையாதீனம் முத்து சிவராமசாமி அடிகளாா், அருட்கலைக் கழக துணைத் தலைவா் ந.சண்முகசுந்தரம், செயலாளா் சு.ஞானப்பூங்கோதை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com