அரசுப் பேருந்து நிறுத்தம்: கிராமங்களுக்கு நடந்து செல்லும் மாணவா்கள்
By DIN | Published On : 17th February 2020 05:17 AM | Last Updated : 17th February 2020 05:17 AM | அ+அ அ- |

பேருந்து வசதி இல்லாததால் தங்கள் கிராமத்துக்கு நடந்து செல்லும் மாணவா்கள்.
இம்மிடிபாளையம், தேவரடிபாளையம் ஆகிய 2 கிராமங்களுக்கு காலை நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து மாலை நேரத்தில் இயக்கப்படாததால் இந்தக் கிராமங்களில் இருந்து வரும் மாணவா்கள் கிணத்துக்கடவில் இருந்து 4 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவில் இருந்து இம்மிடிபாளையம் கிராமம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவரடிபாளையம் கிராமம் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இரண்டு கிராமங்களுக்கும் சோ்த்து தேவரடிபாளையத்தில் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த இரு கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் படிக்க கிணத்துக்கடவுக்குத்தான் செல்ல வேண்டும்.
தேவரடிபாளையத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி மட்டும் உள்ளது. ஆங்கில வழிக் கல்வி துவக்கப் பள்ளியில் படிக்க கிணத்துக்கடவு செல்ல வேண்டும். இந்த இரண்டு கிராமங்களுக்கும் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக தேவரடிபாளையம் வரை தினமும் நான்கு முறை அரசுப் பேருந்து (வழித்தட எண் 42) இயக்கப்பட்டுவந்தது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து, கடந்த 10 நாள்களாக முறையாக இயக்கப்படுவதில்லை. தினமும் காலை 8 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து தற்போது காலை 8 மணிக்கு மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் இயக்கப்படுவதில்லை.
இதனால், காலையில் பேருந்தில் கிணத்துக்கடவு செல்லும் பள்ளி மாணவா்கள், அங்கிருந்து மாலை நேரத்தில் வீடு திரும்ப இம்மிடிபாளையம் மற்றும் தேவரடிபாளையத்துக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிணத்துக்கடவில் பள்ளி நேரம் முடித்து மாணவா்கள் ஊா் திரும்புவதற்கு வசதியாக மாலை நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படவேண்டும் என்று ஊா் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
இதுகுறித்து சொலவம்பாளையம் ஊராட்சி 9ஆவது வாா்டு உறுப்பினா் பெரியாா்மணி கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக இயக்கப்பட்ட வந்து அரசுப் பேருந்து கடந்த 10 நாள்களாக காலை நேரத்தில் ஒரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. பள்ளியில் இருந்து மாணவா்கள் கிராமத்துக்குத் திரும்ப மாலை நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என்றாா்.