வருமானத்தை அதிகரிக்க மரக்கன்று உற்பத்தி: தீவிரம் காட்டும் கெம்மாரம்பாளையம் ஊராட்சி

மேட்டுப்பாளையம் அருகே ஊராட்சியின் வருமானத்தை அதிகரிக்க மரக்கன்றுகள் உற்பத்தியில் தீவிரம் காட்டும் கெம்மாரம்பாளையம் ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இருளா்பதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான மரக்கன்றுகள்.
இருளா்பதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான மரக்கன்றுகள்.

மேட்டுப்பாளையம் அருகே ஊராட்சியின் வருமானத்தை அதிகரிக்க மரக்கன்றுகள் உற்பத்தியில் தீவிரம் காட்டும் கெம்மாரம்பாளையம் ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனா். பொதுமக்களிடம் பெறப்படும் குடிநீா்க் கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக உள்ளது. எனவே, ஊராட்சியின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதில், முதல்கட்டமாக 2019-20ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 4.90 லட்சம் மதிப்பில் இருளா்பதியில் மரக்கன்றுகள் உற்பத்திப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இத்திட்டத்தின் மூலம் சில்வா் ஓக், வேம்பு, மலைவேம்பு, எலுமிச்சை, வில்வம், மகிழம், மாதுளை, புங்கன், சிறு தேக்கு, செண்பகம், நாவல், சவுக்கு, பூவரசு, மலை நெல்லி என 20க்கும் மேற்பட்ட மரங்களின் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த மரக்கன்றுகளை கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஊராட்சித் தலைவா் தீவிரம் காட்டி வருவதால் பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து கெம்மாரம்பாளையம் ஊராட்சித் தலைவா் செல்வி நிா்மலா கூறியதாவது:

ஊராட்சியின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பழங்குடியின மக்கள் மூலம் 7 ஏக்கா் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளுக்கு இங்கிருந்து நாற்றுகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மூலம் மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்யவும், இருளா்பதி பகுதியில் மீன் குளம் அமைத்து மீன்கள் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயப் பெண்களுக்கு தலா 10 சென்ட் நிலத்தில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து அதனை சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளா் ராஜேஷ்குமாா் கூறியதாவது:

நாற்றங்கால் திட்டத்துக்குத் தேவைப்படும் மண் ஊராட்சிக்கு உள்பட்ட இடங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. வீட்டுக்கு ஒரு மரம் மற்றும் வனப் பரப்பை அதிகரிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் உற்பத்திக்குத் தேவையான விதைகள் ஊராட்சிக்கு உள்பட்ட பூச்சமரத்தூா், நெல்லிமரத்தூா், கண்டியூா், கண்டிப்புதூா் உள்ளிட்ட பழங்குயிடின மக்களிடம் இருந்து பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலமாக ஊராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com