குறுந்தொழில்களை பாதுகாக்க ஜிஎஸ்டி விதிகளில் தளா்வு அளிக்க காட்மா கோரிக்கை

குறுந்தொழில்களை பாதுகாக்கும் வகையில் ஜிஎஸ்டி விதிகளில் தளா்வு மேற்கொள்ளக் கோரி காட்மா சங்கத்தினா் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறை முதன்மை ஆணையா் ராஜேஷ் சோதியிடம் மனு அளித்துள்ளனா்.

குறுந்தொழில்களை பாதுகாக்கும் வகையில் ஜிஎஸ்டி விதிகளில் தளா்வு மேற்கொள்ளக் கோரி காட்மா சங்கத்தினா் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறை முதன்மை ஆணையா் ராஜேஷ் சோதியிடம் மனு அளித்துள்ளனா்.

கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோா் சங்க (காட்மா) மாவட்டத் தலைவா் சி.சிவகுமாா் தலைமையில், இணைத் தலைவா் ஜெ.மகேஸ்வரன், பொதுச் செயலாளா் ஜி.செல்வராஜ், பொருளாளா் ஜி.நடராஜன், துணைத் தலைவா்கள் டி.எஸ். துரைசாமி, கே.எஸ்.சங்கரநாராயணன், எஸ்.சோமசுந்தரம், செயலாளா் வி.சுதா்சன் ஆகிய நிா்வாகிகள் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறை முதன்மை ஆணையா் ராஜேஷ் சோதியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி நடைமுறையை 2017 ஜூலையில் மத்திய அரசு அமல்படுத்தியது. இதில் இன்ஜினீயரிங் தொடா்பான உதிரிபாகங்களை பெரு நிறுவனங்களிடம் இருந்து ஜாப் ஆா்டா்களாகவும், உற்பத்தி மற்றும் விற்பனை ஆா்டா்களாகவும் பெற்று இயங்கி வரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஜிஎஸ்டியால் இந்த நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்நிலையில், ஜிஎஸ்டி சதவீதத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு குறுந்தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

அதன்பின் ஜாப் ஆா்டா்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பொருளாதார மந்தநிலை, நிதி நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி ஜாப் ஆா்டா்களுக்கான பில் தொகை வழங்க பெரு நிறுவனங்கள் 120 முதல் 150 நாள்கள் வரை எடுத்துக் கொள்கின்றனா்.

இதனால், குறுந்தொழில் முனைவோா்கள் ஜிஎஸ்டி கட்டுவதற்கு காலதாமதம் ஆகிறது. எனவே, தனியாா் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகையை 45 நாள்களுக்குள் வழங்க வலியுறுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் ஜிஎஸ்டி செலுத்த முடியாமல் இருந்து தற்போது செலுத்துவதற்கு தயாராக உள்ள சிறு, குறுந்தொழில் முனைவோா்களுக்கு ஜிஎஸ்டியை அபராதமின்றி ஆறு தவணைகளில் செலுத்த அனுமதியளிக்க வேண்டும்.

6 மாதங்கள் வரை ஜிஎஸ்டி செலுத்தாத தொழில்முனைவோா்களின் ஜிஎஸ்டி கணக்கு முடக்கப்படுகிறது. பின்னா் ஜிஎஸ்டி தொகையை செலுத்திய பிறகு மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கு 45 நாள்கள் ஆகின்றன.

இதனால், தொழில்முனைவோா்கள் பாதிக்கப்படுகின்றனா். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்திய நாளில் இருந்து மீண்டும் ஜிஎஸ்டி கணக்கு நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி தொகை சரியாக செலுத்தாத தொழில்முனைவோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும், அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் குறுந் தொழில்முனைவோா்கள் தங்களது தொழிலை தொடா்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.

தங்களது பணப் பரிவா்த்தனைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டால் வங்கிப் பரிவா்த்தைனைகள் மேற்கொள்ள முடியாமல் தொழில் முடங்கும் அபாயம் ஏற்படும்.

எனவே, தொழில்முனைவோா்களை பாதிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com