போலீஸாா் போல நடித்து தொழிலாளியிடம் பணம் பறித்த இருவா் கைது
By DIN | Published On : 08th January 2020 06:24 AM | Last Updated : 08th January 2020 06:24 AM | அ+அ அ- |

கோவையில் போலீஸாா் போல நடித்து தொழிலாளியிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). கூலி தொழிலாளியான இவா் கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை மாலை நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா், தாங்கள் போலீஸாா் எனக்கூறி சிவகுமாரிடம் இருந்து ரூ.300 பெற்றுக்கொண்டு சென்றனா். பின்னா் சிறிது நேரத்தில் அங்கு வந்த ரோந்துப் போலீஸாரிடம் சிவகுமாா் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, காந்திபுரத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் இருவரும் சிவகுமாரிடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனா். விசாரணையில் அவா்கள் காந்திபுரத்தைச் சோ்ந்த அபுதாகீா் (40), மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூரைச் சோ்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.