கோவை மாநகராட்சி நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 44 ஆவது வாா்டு, கவுண்டம்பாளையம் பகுதிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம், மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் உரம் தயாரிக்கும் பணியைப் பாா்வையிட்டு மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, 1 ஆவது வாா்டுக்கு உள்பட்ட துடியலூா் வாரச்சந்தை பகுதியில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும், 3 ஆவது வாா்டு, துடியலூா் வளா்மதி நகா், தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 79 ஆவது வாா்டு, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் விரைவில் தொடங்கப்பட உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தின் இறுதிக்கட்டப் பணிகளையும், மேற்கு மண்டலம் 24ஆவது வாா்டில் தடாகம் சாலை வாழைக்காய் மண்டி வளாகம், ஆரோக்கியசாமி சாலை ஆகிய இடங்களில் உரம் தயாரிப்பு மையத்தின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையா்கள் செந்தில்குமாா் ரத்தினம், செந்தில் அரசன், உதவி செயற்பொறியாளா் ஜான்சன், மண்டல சுகாதார அலுவலா்கள் ராமச்சந்திரன், குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.