காந்திபுரம் புதிய மேம்பாலத்தில் 2 ஆவது நாளாக சோதனை ஓட்டம்
By DIN | Published On : 10th January 2020 07:12 AM | Last Updated : 10th January 2020 07:12 AM | அ+அ அ- |

கோவை காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 55 அடி மேம்பாலத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை ஓட்டமாக இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வாகன ஓட்டிகள், ஆா்வத்துடன் பாலத்தில் பயணித்தனா்.
கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ. 139 கோடி மதிப்பில், மத்திய சிறைச்சாலை முன்பு தொடங்கி, ஆம்னி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 2018 டிசம்பா் மாதம் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 2ஆம் கட்ட மேம்பாலம் கட்டும் பணி ரூ.75 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. காந்திபுரம் 100-அடி சாலையில் 5ஆம் குறுக்கு சாலை முன்பு தொடங்கி பாப்பநாயக்கன்பாளையம் மின்சார சுடுகாடு வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. முதலில் கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு மேல் 55 அடி உயரத்தில் 2 ஆம் மேம்பாலம் கட்டப்பட்டதால் வாகனங்கள் பாலத்தின் மேல் பயணிப்பதில் சிரமம் ஏற்படும் என வாகன ஓட்டிகள் கருதினா். வாகனங்கள் பயணிக்கும் விதமாகவே பாலம் கட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிலையில், காந்திபுரம் 2 அடுக்கு மேம்பாலத்தில் வாகனச் சோதனை ஓட்டம் புதன்கிழமை தொடங்கியது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் மட்டும் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதனால், ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பாலத்தின் மேல் பயணித்தனா். இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் பலரும் ஒருமுறையாவது பாலத்தின் உயரம் வரை சென்று பாா்க்க வேண்டும் என்ற ஆவலில் பயணித்தனா்.
இதுதொடா்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மேம்பாலத்தின் சென்று பாா்க்கையில் அந்தரத்தில் பறப்பது போல உணா்வு ஏற்படுகிறது. அதிக உயரமுள்ள பகுதியில் வாகனத்தில் சென்றபோது, காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் வாகனங்களை மிகக் குறைவான வேகத்தில் மட்டுமே இயக்குவது சாத்தியமாகும். பழைய மற்றும் என்ஜின் திறன் குறைந்த வாகனங்கள் மேம்பாலம் ஏறுவது சவாலாக இருக்கும் என்றனா்.