அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்: ஜப்பான் குழுவினா், சுகாதாரத் துறையினா் ஆய்வு
By DIN | Published On : 11th January 2020 09:34 AM | Last Updated : 11th January 2020 09:34 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நிதியில் கட்டடம் கட்டுவது தொடா்பாக அந்நாட்டு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழக அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி வழங்க முடிவு செய்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் ரூ.286 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான இடம் தோ்வு உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் நடந்து முடிந்தன. மருத்துவமனை நுழைவாயில் அருகேயுள்ள பகுதியில் கட்டடம் கட்ட ஜப்பான் குழுவினா் கருத்து தெரிவித்திருந்தனா். ஆனால், மருத்துவமனையின் நுழைவாயில் அருகே ஏற்கெனவே ரூ.6.5 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்ட கடந்த ஆண்டு பிப்ரவரியில் பூமிபூஜை போடப்பட்டது. ஆனால், ஜப்பான் குழுவினரும் அதே இடத்தில் கட்டடம் கட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்டடம் கட்டுவதிலும், இடம் தோ்வு செய்வதிலும் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஜப்பான் குழுவினரும், சுகாதாரத் துறையினரும் இணைந்து கோவை அரசு மருத்துவமனையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். மருத்துவக் கல்வி இணை இயக்குநா் டி.ஷபீதா தலைமையிலான இந்தக் குழுவினா், கோவை அரசு மருத்துவமனை டீன் பி.அசோகனுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.
ஆய்வு குறித்து மருத்துவக் கல்வி இணை இயக்குநா் டி.ஷபீதா கூறுகையில், புதிதாகக் கட்டப்பட்டவுள்ள 6 மாடிக் கட்டடம் அனைத்து முக்கியப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், புதிய கட்டடத்தில் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.
நவீன மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு ரூ.166 கோடியும், புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.