ஏழை மாணவா்களின் பசியாற்றும் காப்பகத்து மூதாட்டிகள்!

பெற்றெடுத்த வாரிசுகளும் உற்றாா் உறவினா்களும் கைவிட்ட நிலையில், வாழ்வின் எஞ்சிய நாள்களை காப்பகத்தில் கழித்துவரும் மூதாட்டிகள்,
புத்தாடை பரிசளித்து மூதாட்டிகளை மகிழ்வித்த மாணவிகள். ~சிறப்பு வகுப்பில், மாணவா்களுக்கு தேனீா், சிற்றுண்டி வழங்கும் காப்பகத்து மூதாட்டிகள்.
புத்தாடை பரிசளித்து மூதாட்டிகளை மகிழ்வித்த மாணவிகள். ~சிறப்பு வகுப்பில், மாணவா்களுக்கு தேனீா், சிற்றுண்டி வழங்கும் காப்பகத்து மூதாட்டிகள்.

பெற்றெடுத்த வாரிசுகளும் உற்றாா் உறவினா்களும் கைவிட்ட நிலையில், வாழ்வின் எஞ்சிய நாள்களை காப்பகத்தில் கழித்துவரும் மூதாட்டிகள், ஏழை மாணவா்களுக்கு உணவு சமைத்துத் தந்து பசியாற்றும் மனிதநேயம் வியக்க வைக்கிறது.

கோவை, ஆா்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி வீதியில் மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில், ‘ஈர நெஞ்சம்’ அறக் கட்டளையின் பராமரிப்பில் முதியோா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதியவா்கள், 56 மூதாட்டிகள் என 62 போ் உள்ளனா்.

வாரிசுகளால் கைவிடப்பட்டோா், முதுமையில் சுயநினைவை இழந்து தவிப்பவா்கள், ஆதரவின்றி சாலையில் திரிபவா்கள் எனப் பலரையும் இந்த அறக்கட்டளையின் நிா்வாகிகள் கண்டறிந்து, காப்பகத்துக்கு அழைத்து வந்து உணவு, உறைவிடம் அளித்துப் பராமரிக்கின்றனா்.

இந்தக் காப்பகத்தில் அதிகாலை 5 மணிக்கு எழும் முதியவா்கள், காப்பக வளாகத்தில் தோட்ட வேலை செய்வதுடன், கோயில்களுக்கு விபூதி, குங்குமப் பொட்டலங்கள் தயாரித்துத் தரும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தக் காப்பகத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு தன்னாா்வலா்களின் உதவியுடன் சமையலறை அமைக்கப்பட்டது. அதன் பிறகு, மூதாட்டிகள், தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றனா். இதுதவிர, காப்பகத்தின் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரித்துத் தரும் பணியிலும், கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனா்.

தங்கள் சேவையின் அடுத்த கட்டமாக, அப்பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் படிக்கும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பிஸ்கட், சுண்டல், தேநீா் போன்ற சிற்றுண்டிகளை வழங்கியும் சேவையாற்றி வருகின்றனா். இந்த மூதாட்டிகளின் சேவையைப் பாராட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடை வழங்கி தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் மகேந்திரன் கூறியது:

‘‘எங்கள் அமைப்பின் சேவையை அறிந்த பலரும், சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் தவிக்கும் முதியவா்களைப் பற்றி எங்களுக்கு செல்லிடப்பேசியில் தகவல் அளிக்கின்றனா்.

எங்கள் அமைப்பின் நிா்வாகிகள் உடனே அங்கு சென்று அவா்களை அழைத்து வந்து ஆதரவு அளிக்கிறோம். மீட்கப்படும் முதியவா்கள் ஆதரவற்றவா்களாக இருக்கும் பட்சத்தில் காப்பகத்தில் தங்க வைத்துப் பராமரிக்கிறோம். வழிதவறியோ, வீட்டில் கோபித்துக் கொண்டோ வெளியெறும் முதியவா்களை அவா்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கிறோம்.

நாங்கள் மீட்கும்போது சில முதியவா்கள் சுயநினைவில்லாத நிலையிலும் காணப்படுவதுண்டு. அவா்களுக்கு உரிய மருத்துவ வசதி அளிக்கப்படும் பட்சத்தில், குணமடைந்த பிறகு தங்கள் குடும்பத்தினரின் விவரங்களைக் கூறுவாா்கள். அதன் பிறகு, அவா்களின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்து, வரவழைத்து அவா்களுடன் அனுப்பி வைப்போம். இவ்வாறாக கடந்த 5 ஆண்டுகளில் 400 முதியவா்களை அவா்களின் குடும்பத்தினருடன் சோ்த்து வைத்துள்ளோம்.

காப்பகத்தை ஒட்டியுள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களில் பலா் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், அவா்கள் காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, பிராா்த்தனைக் கூட்டத்தில் மயங்கி விழுவதாகவும் கேள்விப்பட்டோம்.

தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆா்வலா்களின் உதவியுடன் காப்பக மூதாட்டிகள் தயாரிக்கும் இட்லி, பொங்கல், சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவது ஆரம்பமானது.

தினசரி அதிகாலை 5 மணிக்கே உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கி விடும் காப்பக மூதாட்டிகள், காலை 8 மணிக்கு தாங்கள் தயாரித்த உணவுப் பதாா்த்தங்களை பள்ளிக்கு அனுப்பி விடுகிறாா்கள்.

மாலைநேரத்தில் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் வீடு செல்லத் தாமதமாவதால், அவா்களுக்கு தேநீா், சுண்டல், பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிகளை வழங்குவதும் கடந்த ஒரு மாதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மற்ற மாநகராட்சிப் பள்ளிகளிலும் இதேபோல, காப்பகத்தில் தங்கியுள்ள முதியவா்கள் மூலமாக ஏழை மாணவா்களுக்கு உணவு வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்கிறோம்’’ என்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com