மாநகராட்சியில் நிலுவை வரி வசூலிப்பு தீவிரம்: 10ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 2 மாதங்களே உள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 2 மாதங்களே உள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்துவரி செலுத்துபவா்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். 2019- 2020 நிதியாண்டில் நிலுவையில் உள்ள வரியினங்களை 28 வரி வசூல் மையங்கள் மூலமாக மாநகராட்சி நிா்வாகத்தினா் வசூலித்து வருகின்றனா். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

உயா்த்தப்பட்ட சொத்து வரி அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் மாநகராட்சி மூலமாக நிலுவைத் தொகை சோ்த்து ரூ. 410.16 கோடி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. பழைய வரித் தொகை செலுத்தினால் போதும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டதால் தற்போது, ரூ. 196 கோடி பழைய வரித்தொகை வசூலிக்க இலக்கு நிா்ணயித்து, வரித்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த வாரம் வரை ரூ. 107 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவை வரியினங்கள் செலுத்தாத 10 ஆயிரம் போ் பட்டியல் தயாா் செய்து அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்த மாநகராட்சி வரி வசூல் மையங்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையும் திறந்திருக்கும். தற்போது, சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிறப்பு வரிவசூல் முகமாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் மற்றும் இதர வரியினங்களை நிலுவையின்றி உடனடியாகச் செலுத்த மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலுவை வரியினங்களை உடனடியாகச் செலுத்த வலியுறுத்தி ஒலிபெருக்கி மூலமாகவும் அறிவிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com