முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சாலையை சீரமைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட திமுகவினா்
By DIN | Published On : 20th January 2020 11:44 PM | Last Updated : 20th January 2020 11:44 PM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் -அன்னூா் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததை கண்டித்து திமுகவினா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டுப்பாளையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச் சாக்கடை பணிகளுக்காக 33 வாா்டுகளிலும் குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் நிறைவடைந்தும் குழிகளை சரிவர மூடாததால் அன்னூா் சாலை, உதகை சாலை ஆகிய பகுதிகளில் விபத்துகள் அதிகரித்து நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்நிலையில் சாலையில் உள்ள குழிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தையும், குடிநீா் வடிகால் வாரியத்தையும் கண்டித்து மேட்டுப்பாளையம் நகர திமுக செயலாளா் யூனுஸ் தலைமையில் அக்கட்சியினா் அன்னூா் சாலையில் குழியாக உள்ள இடத்தில் மரத்தை நடவு செய்து, திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளா் சென்னகேசவன், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவா்த்தை நடத்தி உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.