முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கணுவாய் மலைப் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்
By DIN | Published On : 27th January 2020 11:34 PM | Last Updated : 27th January 2020 11:34 PM | அ+அ அ- |

துடியலூா் அருகே உள்ள கணுவாய் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கருஞ்சிறுத்தை நடமாடியதாக சமூக வலைதளங்களில் விடியோ பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைகட்டி மலையடிவார கிராமங்களான சின்னத் தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், கணுவாய் பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆனைகட்டி - தடாகம் சாலையில் சோமையனூரில் உள்ள திருவள்ளுவா் நகா் மலைப் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் பரவியது.
இந்த மலையின் அடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்கள் சிலா் அங்கு கருமையான விலங்கு ஒன்று நடமாடுவதைப் பாா்த்து தங்களது செல்லிடப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.
இது சுற்று வட்டார கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத் துறையிடம் கேட்டபோது, இந்த வனப்பகுதியில் இதுவரை சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததில்லை. வலைதளங்களில் பரவியுள்ள விடியோ குறித்து விசாரித்து வருகிறோம். இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்றனா்.