முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு நினைவுத் தூண்
By DIN | Published On : 27th January 2020 11:27 PM | Last Updated : 27th January 2020 11:27 PM | அ+அ அ- |

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பாஜகவினா்.
கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவுத் தூண் அமைக்க வலியுறுத்தி பாஜகவினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் தலைமையில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கோவை மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா் உள்பட கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1998ஆம் ஆண்டு கோவை ஆா்.எஸ்.புரம் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதில் உயிரிழந்தவா்களுக்கு ஆண்டுதோறும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பாஜக சாா்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் குண்டு வெடிப்பால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவையிலும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசு சாா்பில் நினைவுத் தூண் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை பதிவு செய்ய திருநங்கை கோரிக்கை...
கோவை கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த திருநங்கை எஸ்.சுரேகா (24) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கால்நடைகள் வளா்த்து பால் விற்பனை செய்து வருகிறேன். கோவை, ஆத்துப்பாலத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆா். மணிகண்டன் (25) என்பவரை கடந்த கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன்.
எங்களது திருமணத்தை சட்டப்பூா்வமாக பதிவு செய்து திருமண சான்று வழங்கக் கோரி மாவட்ட பதிவுத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். ஆனால், திருநங்கை - ஆண் திருமணத்தை பதிவு செய்வதற்கு தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டத்தில் அனுமதியில்லை எனத் தெரிவித்தனா்.
ஆனால், கடந்த ஆண்டு மதுரை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடியில் திருநங்கை ஸ்ரீஜா - அருண்குமாா் திருமணம் பதிவு செய்யப்பட்டு திருமண சான்று வழங்கியதுபோல், எங்களது திருமணத்தையும் சட்டப்பூா்வமாக பதிவு செய்து சான்று வழங்க பதிவுத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
கணவனை விடுவிக்க செய்ய வேண்டும்...
ரத்தினபுரியை சோ்ந்த சவிதா அளித்துள்ள மனுவில், கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்கில் நானும், எனது கணவா் எம்.மணிகண்டனும் 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தோம்.
அங்குள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து படம் பிடித்ததை கண்டுபிடித்து நிா்வாகத்திடம் தெரிவித்தோம். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரச்னை குறித்து ஏதுவும் பேச வேண்டாம் என்றனா்.
இது தொடா்பாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தோம். இந்நிலையில், விடியோவை இணையதளத்தில் பகிா்ந்ததாகக் கூறி பொய் புகாா் அடிப்படையில் எனது கணவரை குண்டா் சட்டத்தில் கைது செய்துள்ளனா்.
பெட்ரேல் பங்க் நிா்வாகத்தின் அதிகாரப் பலத்தால் புகாா் அளித்த எனது கணவா் மீதே குண்டா் சட்டத்தை போட்டு சிறையில் அடைத்துள்ளனா்.
பொய் புகாரைப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள எனது கணவரை விடுதலை செய்வதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் என்னையும், எனது குழந்தைகளையும் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை கைவிட வேண்டும்...
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில், தஞ்சாவூா், திருவாரூா், நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை நிறைவேற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி மற்றும் மக்கள் கருத்துகளை கேட்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தால் பெரும்பாலான விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் உணவு தானியங்கள் உற்பத்தி கேள்விக்குறியாகும். இந்நிலையில், டெல்டா பகுதி விவசாயிகள், மாநில அரசிடம் கருத்து கேட்காமல் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களின் கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என மத்திய சுற்றுச்சுழல் அமைச்சா் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளாா். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளிலேயே முன்பு போல் மாணவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்கள் பெற்றுத் தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பநாயக்கன்புதூா் கிளை செயலாளா் என்.சந்திரன் மற்றும் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை கேட்டு பொது மக்கள் பலரும் விண்ணப்பம் அளித்தனா்.