முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவையில் அதிகமான ஸ்மாா்ட் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்
By DIN | Published On : 27th January 2020 11:28 PM | Last Updated : 27th January 2020 11:28 PM | அ+அ அ- |

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாகத் தோ்வு செய்யப்பட்ட ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்ட கோப்பையுடன் மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் மற்றும் அதிகாரிகள்.
கோவையில் அதிகமான ஸ்மாா்ட் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் கூறினாா்.
கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட ரேஸ்கோா்ஸ் காவல் நிலையம் (சி-2) மாநில அளவில் சிறந்த காவல் நிலையமாகத் தோ்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினாா். இந்த விருதினை ரேஸ்கோா்ஸ் காவல் ஆய்வாளா் சக்திவேல் பெற்றுக் கொண்டாா்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ரேஸ்கோா்ஸ் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது. இதற்கு முன்னதாக நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற விருதினை ஆா்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றுள்ளது.
இந்த விருது காவல் நிலைய அதிகாரிகளின் கடும் உழைப்பால் கிடைத்துள்ளது. விருது வழங்கிய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, காவல் துறைத் தலைவா் ஆகியோருக்கு நன்றி. அடுத்த கட்டமாக கோவையில் அதிகப்படியான ஸ்மாா்ட் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றாா்.
துணை ஆணையா்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு, ரேஸ்கோா்ஸ் காவல் ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.