முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 27th January 2020 11:53 PM | Last Updated : 27th January 2020 11:53 PM | அ+அ அ- |

ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறையினா்.
பொள்ளாச்சியை அடுத்த ராமபட்டிணத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.
பொள்ளாச்சி நகரை பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, புதிதாக சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக பொள்ளாச்சி - கேரள எல்லையில் உள்ள ராமபட்டிணம் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால் ராமபட்டிணத்தில் இருந்து மண்ணூா் வரையிலும் உள்ள மூன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் திட்டமிட்டனா்.
ஒருவழிச் சாலையை 7 மீட்டா் அகலத்தில் இரு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறுகிய சாலையை விரிவாக்கம் செய்ய சில மாதங்களுக்கு முன்பு அளவீடு பணி நடந்தது. பல இடங்களில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் சாலை விரிவாக்கப் பணி தாமதமாகும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக ராமபட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வசித்தவா்களுக்கு சில வாரத்துக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து ராமபட்டிணத்தில் இருந்து மண்ணூா் வரையில் உள்ள குறுகலான சாலையை விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்காக சாலையோரம் ஆக்கிரமித்து இருந்த வீடுகள் மற்றும் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை இடித்து அகற்றினா்.