முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மூளைச்சாவு அடைந்த பொறியாளரின் உடல் உறுப்புகள் தானம்
By DIN | Published On : 27th January 2020 11:29 PM | Last Updated : 27th January 2020 11:29 PM | அ+அ அ- |

சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த பொறியாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 9 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், என்.கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் வி.கௌதம் (29). இவா் தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே நான்கு சக்கர வாகனத்தில் ஜனவரி 23 ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தாா்.
இவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கௌதம் மூளைச்சாவு அடைந்ததாக ஜனவரி 26ஆம் தேதி மருத்துவா்கள் அறிவித்தனா்.
இதையடுத்து, உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோா்கள் மற்றும் மனைவி ஆகியோா் சம்மதம் அளித்தனா்.
தமிழ்நாடு உறுப்புகள் தான ஆணையத்தின் அனுமதியுடன் கெளதமின் இருதய வால்வு, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை உடலில் இருந்து அகற்றப்பட்டன. இதில் சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு ஆகியவை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கும், நுரையீரல் மற்றும் கல்லீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன்மூலம் 9 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.