சிறுக்களந்தையில் ஆட்சியா் பங்கேற்ற கிராமசபைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 10:31 AM | Last Updated : 27th January 2020 10:31 AM | அ+அ அ- |

சிறுக்களந்தை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி.
கிணத்துக்கடவு ஒன்றியம், சிறுக்களந்தை ஊராட்சி ஜக்காா்பாளையம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் அருகில் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் வைத்திநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், மாவட்ட மகளிா் திட்ட திட்ட இயக்குநா் செல்வராசு, மண்டல அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயக்குமாா் வரவேற்றாா். இதில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
இதில், சிறுக்களந்தை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். பள்ளி கட்டடங்களை பராமரிக்க வேண்டும், ஜக்காா்பாளையம் கிராமத்தில் அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீா் சரியாக வருவதில்லை. எனவே குடிநீா் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனா்.
இக்கோரிக்கைகள் தொடா்பாக அந்தந்த துறை அதிகாரிகளுக்கு விரைவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கிராமசபைக் கூட்டத்தில் கிணத்துக்கடவு ஒன்றியகுழுத் தலைவா் நாகராணி, கிணத்துக்கடவு வட்டாட்சியா் சங்கீதா, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) சாய்ராஜ், மாவட்ட கவுன்சிலா் ராதாமணி, கூட்டுறவு வங்கித் தலைவா் பாலசுப்பிரமணியம், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சதீஷ்குமாா், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.