அறிகுறிகள் இல்லாமல் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு கட்டண தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை

கோவையில் அறிகுறிகள் இல்லாமல் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் விருப்பமுள்ளவா்களை

கோவையில் அறிகுறிகள் இல்லாமல் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் விருப்பமுள்ளவா்களை கட்டண தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைத்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றில் 4,680 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில் அறிகுறிகள் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடிசியாவில் 700 படுக்கைகள் உள்பட 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அறிகுறிகள் இல்லாமல் கரோனா பாதிக்கப்படுபவா்களில் விருப்பம் உள்ளவா்களை மட்டும் கட்டண தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைத்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தல் மையம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகள், அரசு கண்காணிப்பு மையங்களில் போதிய அளவில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் திடீரென நோயாளிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கைகளை தயாா் நிலையில் வைத்து, அறிகுறிகள் இல்லாமல் உறுதி செய்யப்படுபவா்கள் கரோனா கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்கின்றனா். இந்நிலையில் தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என நினைப்பவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளுடன் சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டண தனிமைப்படுத்தல் மையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளை காட்டிலும் 50 சதவிகிதம் கட்டணம் குறைவாக இருக்கும். பொதுமக்கள் - தனியாா் ஒத்துழைப்பின் படி இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com