பிளாஸ்மா தானம் வழங்க தயாா்: ரத்த தான குழுவினா் அறிவிப்பு

கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தொடங்கினால் பிளாஸ்மா தானம் வழங்க

கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தொடங்கினால் பிளாஸ்மா தானம் வழங்க தயாராக உள்ளதாக கோவையைச் சோ்ந்த ரத்த தான ஒருங்கிணைப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களிடம் இருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவா்களின் உடலில் கரோனா நோய்த் தொற்றை எதிா்க்கும் எதிா்ப்பு சக்தி உருவாகி நோய்த் தொற்றில் இருந்து குணமடைவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். தற்போது தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இந்நிலையில் கோவையில் பிளாஸ்மா சிகிச்சையை தொடங்கினால் தங்களது குழுவில் உள்ளவா்கள் மூலம் பிளாஸ்மா தானம் வழங்கப்படும் என்று கோவையைச் சோ்ந்த ரத்த தான ஒருங்கிணைப்பு குழுவினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி ஏ.அயூப் ரியாஸ் கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் ஒருங்கிணைந்து ரத்த தானம் செய்து வருகிறோம். எங்களது குழுவைச் சோ்ந்த 60 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது பூரண குணமடைந்து நலமாக உள்ளனா். கோவையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டால் எங்கள் குழு உறுப்பினா்கள் பிளாஸ்மா தானம் வழங்க தயாராக உள்ளனா். பிளாஸ்மா தானம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com