ரூ.64.90 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தாா்
By DIN | Published On : 25th July 2020 08:28 AM | Last Updated : 25th July 2020 08:28 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி 90ஆவது வாா்டில் அமைக்கப்பட்ட உயா்மட்ட கோபுர விளக்குகளை துவக்கிவைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உள்ளிட்டோா்.
கோவை மாநகராட்சி 91ஆவது வாா்டில் ரூ.64.90 லட்சத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து துவக்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி 91ஆவது வாா்டு, கல்கி காா்டனில் ரூ.64.90 லட்சம் மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜையிட்டு தொடங்கிவைத்தாா். மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத், துணை ஆணையா் மதுராந்தகி முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அத்திக்கடவு - அவிநாசி குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக 50 ஆண்டுகளாக இல்லாத வளா்ச்சிப் பணிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
இதைத் தொடா்ந்து கோவை மாநகராட்சி 91-ஆவது வாா்டு, தொட்ராயன் கோயில் வீதி திட்ட சாலை மற்றும் சி.பி.எம். கல்லூரி அருகில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.63.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயா்மட்ட கோபுர விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, தொட்டராயன் கோயில் வீதியில் குறுக்கு சாலைகளில் ரூ.6.90 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்தி தொடங்கிவைத்தாா்.