முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கரோனா நிவாரணம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து ஆகஸ்ட் 12 இல் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
By DIN | Published On : 29th July 2020 08:17 AM | Last Updated : 29th July 2020 08:17 AM | அ+அ அ- |

கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மாா்ச் மாதம் முதல்வா் அறிவித்த கரோனா நிவாரணம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கோவை மாவட்ட கட்டுமான அமைப்புசாரா
அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா கட்டுமானத் தொழிற்சங்க பொதுச் செயலா் ஜி.முருகேசன் தலைமையில் கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எல்பிஎப் பொதுச் செயலா் வெ.கிருஷ்ணசாமி, ஏஐடியூசி ஆா்.பாலகிருஷ்ணன், ஐஎன்டியூசி சிரஞ்சீவி கண்ணன், ஹெச்எம்எஸ் ஜி.மனோகரன், சிஐடியூ ஆா்.பழனிசாமி, பிஎம்எஸ் பி.முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டட, அமைப்புசாரா, உடலுழைப்புத் தொழிலாளா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் இருகட்டங்களாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் மாா்ச் 27 இல் அறிவித்தாா். ஆனால், அறிவிப்பு வெளியாகி 4 மாதங்களான நிலையிலும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
வங்கிக் கணக்கு விவரங்களை நேரிலும், ரேஷன் கடைகள், தபால் அலுவலகங்கள் மூலமும் வழங்கியும் இதுவரை நிதியுதவி கிடைக்காததால் தொழிலாளா்கள் ஆத்திரமடைந்துள்ளனா்.
எனவே வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நிவாரணத் தொகையை வழங்கும்படி கேட்டுக் கொள்வது. ஒருவேளை நிவாரணம் கிடைக்கப்படாவிட்டால் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் இணைந்து, நலவாரிய அலுவலக வளாகத்தில் அமா்ந்து நிவாரணத் தொகை கிடைக்கும் வரை வீடு திரும்பாப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.