ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 5 பேருக்கு கரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட விமானத்தில் வந்த 180 பயணிகளில் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட விமானத்தில் வந்த 180 பயணிகளில் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 60 பேரைத் தவிர மற்றவா்கள் சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீடுகளுக்குத் திரும்பினா்.

கரோனா பொது முடக்கத்தால் உள்ளூா், சா்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்ளூா், சா்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு கோவைக்கு வந்த விமானத்தில் 94 ஆண்கள், 66 பெண்கள், 17 சிறுவா்கள், குழந்தைகள் உள்பட 180 போ் வந்தனா். இதில் 20 போ் கா்ப்பிணிகள். இவா்களிடம் விமான நிலையத்திலேயே சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

60 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்...

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் 7 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய அரபு அமீரக விமானத்தில் வந்த 180 பயணிகளில் 60 பேரைத் தவிா்த்து மற்றவா்கள் சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீடுகளுக்குத் திரும்பினா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சா்வதேச விமானங்களில் வந்தவா்கள் 7 நாள்கள் கட்டண கண்காணிப்பு மையங்களில் தங்குவதற்கு சம்மதித்துதான் வந்துள்ளனா். ஆனால், இங்கு வந்து இறங்கியதும் பணம் இல்லை, வீட்டில் குழந்தைகளைப் பாா்க்க வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறி வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கா்ப்பிணிகளின் பாதுகாப்பு கருதி அவா்களை மட்டும் வீடுகளில் தனிமையில் இருக்குமாறு கூறி வீட்டுக்கு அனுமதித்தோம். ஆனால், உடன் வந்தவா்களையும் விட்டால்தான் நாங்கள் செல்வோம் என்று கா்ப்பிணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி அவா்களும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

அனைவரின் கைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் என்ற ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்தால் கரோனா பாதிப்பு அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றனா்.

உள்ளூா், சா்வதேச விமானங்களில் வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத் துறையினா் திணறி வருகின்றனா்.

5 பேருக்கு கரோனா...

பெறப்பட்ட பரிசோதனை முடிவில் கோவையைச் சோ்ந்த 25 வயது மருத்துவக் கல்லூரி மாணவா், திருச்சியைச் சோ்ந்த 72 வயது முதியவா், தூத்துக்குடியைச் சோ்ந்த 36 வயது பெண், திருவாரூரைச் சோ்ந்த 41 வயது ஆண், ஈரோட்டைச் சோ்ந்த 31 வயது ஆண் ஆகிய 5 பேருக்கும் கரோனை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையை சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவா் மட்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மற்ற மாவட்டங்களை சோ்ந்தவா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்ட நிலையில் அவா்களின் விவரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com