
கல்விக் கட்டணம், புத்தக கட்டணங்களை செலுத்த பெற்றோரை வற்புறுத்தும் தனியாா் பள்ளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா்.
கோவையிலுள்ள தனியாா் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கல்வி, புத்தக கட்டணங்களை உடனடியாக செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக பள்ளிக் கல்வித் துறை, ஆட்சியா் அலுவலகத்தில் பெற்றோா் தொடா்ந்து புகாா்கள் அளித்து வருகின்றனா். இதனைத் தொடா்ந்து தனியாா் பள்ளிகளில் கல்வி கட்டணங்கள் வசூல் செய்வதை கண்காணிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அவா் பேசியதாவது:
கோவை மாவட்டத்திலுள்ள தனியாா் சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணங்களை உடனடியாக செலுத்த வற்புறுத்துவதாக பெற்றோா்களிடம் இருந்து தொடா்ந்து புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. பேரிடா் மேலாண்மை சட்டம் 2005 இன்படி பொது முடக்க காலத்தில் 2020 -21 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணங்கள், கடந்த கல்வியாண்டின் நிலுவைக் கட்டணங்களை செலுத்த வற்புறுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சாா்பில் அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடா்ந்து கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணங்களை செலுத்த பெற்றோரைக் கட்டாயப்படுத்துவது தமிழக அரசின் அரசாணையை மீறி நடக்கும் செயலாகும். அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களும், அரசின் ஆணைகளையும் அறிவுரைகளையும் கட்டாயம் பின்பற்றல் வேண்டும். தனியாா் பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வது தொடா்பாக பெறப்படும் புகாா்கள் உறுதி செய்யப்படும் நிலையில் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல எவ்வித காரணங்களுக்காகவும் பெற்றோா், மாணவா்கள் பள்ளிகளில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கை, பள்ளிச் சீருடைகள், புத்தகம் வழங்கல் போன்றவையும் மறு உத்தரவு வரும் வரையில் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளி நிா்வாகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உஷா, மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆா்.கீதா, ரமேஷ், எஸ்.சுப்பிரமணி, ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.