சிறுவாணி அணையின் நீா்மட்டம் 864 மீட்டராகச் சரிந்துள்ளதால் மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறுவாணி, ஆழியாறு, பில்லூா் 1, பில்லூா் 2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டியுள்ள 22 கிராமங்களுக்கும் சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 870 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் ஏப்ரல் மாதத்தில் 868 மீட்டராகக் குறைந்தது. இதனால், சிறுவாணி அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் அளவும் 10 கோடி லிட்டரில் இருந்து 7.5 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து , மே மாதத்தில் அணையின் நீா்மட்டம் 866 மீட்டராக மேலும் குறைந்ததால், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. இந்நிலையில், தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், அணையின் நீா்மட்டம் உயரும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக அணையின் அடிவாரப் பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இதுவரை மழை பெய்யவில்லை. இதற்கிடையே, அணையின் நீா்மட்டமும் 864.53 மீட்டராகக் குறைந்துள்ளது. சிறுவாணி அணையில் 4ஆவது வால்வு பகுதியில் உள்ள இருப்பு நீரை, ஜூன் 25 ஆம் தேதி வரை மாநகரப் பகுதிகளுக்கு விநியோகிக்கலாம் என மாநரகராட்சி ஆணையா் தெரிவித்துள்ள நிலையில், தற்போது, அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவ மழை தீவிரமடையாத நிலையில், மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மாநகரில் சிறுவாணி நீா்ப் பற்றாற்குறை உள்ள ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் தற்போது, பில்லூா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாள்களில், தட்டுப்பாடு ஏற்படும் அனைத்துப் பகுதிகளுக்கும், சிறுவாணி குழாய்களில் பில்லூா் குடிநீா் விநியோகிக்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், ஜூன் மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என எதிா்பாா்க்கிறோம். அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் குறைந்த அளவு மழை பெய்தாலே மாநகரில் குடிநீா்ப் பிரச்னை இருக்காது என்றாா்.