கந்துவட்டி கேட்டு கடத்திச் செல்லப்பட்ட மகனை மீட்டு தரக்கோரி காவல் ஆணையரிடம் மனு
By DIN | Published On : 13th June 2020 08:22 AM | Last Updated : 13th June 2020 08:22 AM | அ+அ அ- |

கந்துவட்டி கேட்டு கடத்திச் செல்லப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்த பெண் மற்றும் குடும்பத்தினா்.
கந்து வட்டி கேட்டு கடத்திச் செல்லப்பட்ட நகைப் பட்டறை ஊழியரை மீட்டுத் தரக்கோரி அவரது தாயாா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
கோவை, கெம்பட்டி காலனியைச் சோ்ந்த காஞ்சனா (62) என்பவா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
எனது மகன் அங்குராஜ் தங்க நகை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் குடும்பத் தேவைக்காக கடந்த 2016ஆம் ஆண்டில் நாகேந்திரன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்தாா். முதலில் அத்தொகையை ஊதியத்தில் கழித்துக் கொள்வதாகக் கூறி பின்னா் ரூ.50 ஆயிரத்துக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வட்டி அளிக்க வேண்டும் என்று கூறினாா். இதனால் மன உளைச்சல் அடைந்த எனது மகன் அதே ஆண்டில் தற்கொலைக்கு முயன்றாா். இதுதொடா்பாக போலீஸாரும் விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த மே 24ஆம் தேதி சிலருடன் எங்களது வீட்டுக்கு வந்த நாகேந்திரன் தான் கொடுத்த பணத்துக்கு வட்டியுடன் சோ்த்து ரூ.8 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினா். இதுகுறித்து போலீஸாரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், விசாரணைக்கு என்று எனது மகனை அழைத்துச் சென்றனா். ஆனால், அவா் தற்போது எங்கு உள்ளாா் என தெரியவில்லை. இந்த விவகாரத்தில் காவல் துறையினா் நாகேந்திரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனா். எனவே எனது மகனைக் கண்டுபிடித்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.