பஞ்சாலைத் தொழிலாளா்களின் ஊதிய விவகாரம்: நிா்வாகத்துடன் தொழிற்சங்கத்தினா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி

தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி) தொழிலாளா்களின் ஊதிய நிலுவை தொடா்பாக நிா்வாகத்துடன் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.
என்.டி.சி. நிா்வாகத்துடன் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகள்.
என்.டி.சி. நிா்வாகத்துடன் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகள்.

தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி) தொழிலாளா்களின் ஊதிய நிலுவை தொடா்பாக நிா்வாகத்துடன் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 5 பஞ்சாலைகள் கோவையில் உள்ளன. இந்த ஆலைகளில் நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளா்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தப் பஞ்சாலைகள் இயங்கவில்லை.

இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, தொழிற்சங்கத்தினா் போராட்டங்களிலும், பேச்சுவாா்த்தைகளிலும் ஈடுபட்ட பிறகு நிலுவை ஊதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மே மாத ஊதியமும் வழங்கப்படாததை அடுத்து என்டிசி நிா்வாகம், மாவட்ட ஆட்சியா், தொழிற்சங்கத்தினருடன் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில் ஜூன் 8 அல்லது 9ஆம் தேதியில் ஊதியம் வழங்கிவிடுவதாக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி 5 ஆலைகளின் எதிரிலும் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து காட்டூா் சோமசுந்தரா மில் சாலையில் உள்ள என்.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கத் தலைவா்கள், அதிகாரிகள், பொது மேலாளா்கள் பங்கேற்ற பேச்சுவாா்த்தைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமையில் எல்பிஎஃப் பாா்த்தசாரதி, ஐஎன்டியூசி சீனிவாசன், சிஐடியூ சேவியா், ஏடிபி கோபால், ஏஐடியூசி எம்.ஆறுமுகம், ஹெச்எம்எஸ் ராஜாமணி, எம்எல்எஃப் தியாகராஜன், என்டிஎல்எஃப் ரங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், ஏற்கெனவே ஒப்புக்கொண்டவாறு ஊதியத்தை வழங்குவதற்கு என்.டி.சி. நிா்வாகம் மறுத்துவிட்டது. இதனால் பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை (ஜூன் 18) மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது என்றும் அதன் தொடா்ச்சியாக, ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.சி. தலைமை அலுவலக வளாகத்தில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் தொழிற்சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com