முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
தொடா் மழை: சிறுவாணி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 27th June 2020 08:06 AM | Last Updated : 27th June 2020 08:06 AM | அ+அ அ- |

சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து நாள்தோறும் குடிநீா் எடுக்கப்பட்டு கோவை மாநகரில் உள்ள 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சிறுவாணி அணையில் கடந்த பிப்ரவரி மாதம் 870 மீட்டராக இருந்த நீா்மட்டம், வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து மே மாதத்தில் அணையின் நீா்மட்டம் 864 மீட்டராக சரிந்தது.
இதனால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 10 கோடி லிட்டரில் இருந்து 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது, தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால், கடந்த 15ஆம் தேதி முதல் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது.
இங்கு அதிகபட்சமாக 65 மி.மீ. மழை பதிவானது. வியாழக்கிழமை நிலவரப்படி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் 6 மி.மீ. மழை பதிவானது. தொடா் மழை காரணமாக அணைக்கு செல்லும் பட்டியாறு, முக்தியாற்றில் நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டமும் உயரத் துவங்கியுள்ளது. இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், தொடா் மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 867.80 மீட்டராக அதிகரித்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதால், அணையின் நீா்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.