சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றவிருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது: எல்.முருகன்

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றவிருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 
சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றவிருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது: எல்.முருகன்

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றவிருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

கோவை கணபதியில் செய்தியாளர்களிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் திங்கள்கிழமை கூறியதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு அஞ்சலி. மத்திய அரசின் ஒர் ஆண்டு சாதனைகளை எடுத்துச்சொல்லும் விதமாக சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லி வருகிறோம்.

பா.ஜ.க ஆட்சியில் பல ஆண்டுகளாக இருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. அதில் சொல்லும் விதமாக ராமர் கோவில் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டு ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அதேபோல் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை சிறப்பாக மாறும். இதுபோல முத்தலாக், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நம் வாழ்வை மாற்றிப்போட்டுள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் பொது முடக்கம் தேசம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. பொது முடக்கத்தால் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக ரூ.1.5 லட்சம் கோடி நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜன்தன் வங்கிகளில் 1 கோடி பெண்களுக்கு ரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரேசன் பொருள்களில் மத்திய அரசின் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பாஜக சார்பில் தேவைப்படுவோர்க்கு உணவு பொருள்கள் திட்டம் மூலம் 1 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மோடி கிட் 30 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர முகக்கவசம், கிருமி நாசினி கொடுக்கப்பட்டுள்ளது. 45 லட்சம் முகக்கவசம் கொடுக்கப்பட்டுள்ளது, 1 கோடி பேருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மத்திய அரசின் சுய சார்பு பாரதம் திட்டம் மூலம் 20 லட்சம் கோடி பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் கோடி மீணவர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, கோல்டு ஸ்டோரேஜ், எம்.எஸ்.எம்.இ.எஸ் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் எம்.எஸ்.எம்.இ நிதி திட்டம் மூலம் 10 சதவீதம் பேர் நன்மை அடைந்துள்ளனர். 

அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் காணொலி மூலம் பா.ஜ.க சார்பில் மோடி ஆட்சியின் சாதனைகள் தொடர்பாக பேரணி நடக்கிறது. இதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துக்கொண்டார். பா.ஜ.க மூத்த தலைவர் முரளிதரராவ், தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரும் பேரணியில் கலந்துக்கொண்டனர்.

கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது. ஆனால் ஆறு மாதம் காலம் முன்பே அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கிவிட்டன. அதன் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலைகளை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர கோரிக்கை வைக்கப்படும்.  சாத்தான்குளம் சம்பவத்தை பொறுத்தவரையில் காவல்துறையினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

சிலர் இதை அரசியலாக்க முயற்சி செய்கின்றனர். வழக்கு சி.பி.ஐ வசம் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. சில காவல்துறையினர் செய்த தவறு காரணமாக ஒட்டுமொத்த காவல்துறையினரையும் தவறாக பேசுவது சரியல்ல. கரோனா பொறுத்தவரையில் எல்லாரும் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தான் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தப்ளிக் மாநாடு மூலம் தான் தமிழகத்தில் கரோனா பரவியது என்பதை மறுக்க முடியாது. கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முழு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். பொது முடகத்தை மக்கள் வரவேற்கின்றனர். மக்களின் தேவைக்காக பொது முடக்கம் போடப்பட்டால் அதனை பா.ஜ.க வரவேற்கும் என்றார். இதில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், செய்தித் தொடர்பாளர் சபரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com