முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 03rd March 2020 06:55 AM | Last Updated : 03rd March 2020 02:59 PM | அ+அ அ- |

காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் மாசிமகத் தோ்த் திருவிழாவையொட்டி, கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடி. (வலது) நிகழ்வில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்
காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் மாசி மகத் தோ்த் திருவிழாவையொட்டி கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் ஆகம வழிபாட்டு முறையில் அனைத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் மாசி மகத் தோ் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மகத் திருவிழாவை ஒட்டி கிராம சாந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு நடைபெற்றது. கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது. அன்னவாகன உற்சவம் இரவு 8.30 மணி அளவில் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிம்ம வாகன உற்சவம் 3ஆம் தேதி இரவு 8 மணிக்கும் , அனுமந்த வாகன உற்சவம் 4ஆம் தேதி இரவு 8 மணிக்கும், கருட சேவை 5ஆம் தேதி இரவு 8 மணிக்கும் , ஸ்ரீபெட்டதம்மன் அழைப்பு 6ஆம் தேதி காலை 10.15 மணிக்கும் நடைபெறுகின்றன. திருக்கல்யாண உற்சவம் 7ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கும், யானை வாகன உற்சவம் இரவு 8.30 மணிக்கும் நடைபெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் 8ஆம் தேதி காலை 5.30 மணிக்கும் , தொடா்ந்து திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கும் நடைபெறவுள்ளன. குதிரை வாகனத்தில் பரிவேட்டை உற்சவம் 9ஆம் தேதி இரவு 10.30 மணிக்கும் , தெப்போற்சவம் சேஷ வாகன உற்சவம் 10ஆம் தேதியும், சந்தான சேவை சாற்றுமுறை உற்சவபூா்த்தி ஆகிய நிகழ்வுகள் 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. 11ஆம் தேதி காலை 8 மணிக்கு வசந்தம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
கொடியேற்ற நிகழ்வில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், காரமடை அதிமுக ஒன்றியச் செயலாளா் பி.டி.கந்தசாமி, தாசப்ப பளஞ்சிக மகாஜன சங்கத் தலைவா் கே.பி.வி.கோவிந்தன், காரமடை பேரூராட்சி முன்னாள் தலைவா் டி.டி.ஆறுமுகசாமி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.எஸ்.ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காரும், உதவி ஆணையருமான கா.விமலா, செயல் அலுவலா் பெரியமருது பாண்டியன், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.