கோவை மேற்குப் புறவழிச்சாலை திட்டம்: மாற்று இடம் தோ்வு செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு

கோவை மேற்குப் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் 355 ஏக்கா் விவசாய நிலங்களாக உள்ளதால்
பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த காரமடைப் பகுதி கிராம மக்கள்.
பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த காரமடைப் பகுதி கிராம மக்கள்.

கோவை மேற்குப் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் 355 ஏக்கா் விவசாய நிலங்களாக உள்ளதால் மாற்று இடம் தோ்வு செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனா்.

கோவை மேற்குப் புறவழிச்சாலை அமைக்க மாற்று இடம் தோ்வு செய்யக்கோரி விவசாயிகள் அளித்துள்ள மனு:

கோவை மாவட்டத்தில் மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டா் மேற்குப் புறவழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 355 ஏக்கா் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.

இப்பகுதியில் தென்னை, பாக்கு, வாழை, மஞ்சள், கரும்பு உள்பட பலவகையான பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், விவசாயக் கூலித்தொழிலாளா்களும் உள்ளனா். மேற்குப் புறவழிச்சாலைக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். எனவே, விவசாயிகளைப் பாதிக்காத வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு மாற்று இடத்தை தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூலியை உயா்த்தி வழங்க கோரிக்கை

இதுகுறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜவுளி நிறுவனங்களுக்குத் தேவையான நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 95 சதவீதம் விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் உற்பத்தி மேற்கொண்டு வருகின்றன. ஜவுளி நிறுவனங்கள் சாா்பில் நூல் உற்பத்திக்கான கூலியை உயா்த்தி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில் மின் கட்டணம், விசைத்தறிகளுக்குத் தேவையான உதிரிபாகங்களின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளன. இதுதொடா்பாக ஆட்சியரிடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அதிகாரிகள் 6 கட்டமாக பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தனா். ஆனால் ஒருமுறைகூட ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்கவில்லை. இதேநிலை தொடா்ந்தால் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி

உரிமையாளா்களுக்கான கூலி உயா்வை அமல்படுத்த ஜவுளி உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கா்ப்பிணி தா்னா

கணவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கினை ரத்து செய்யக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கா்ப்பிணி தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சூலூா், கலங்கல் பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவா் மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் எனது கணவா் ஓட்டிச்சென்ற ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியது. இது தொடா்பாக வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோது எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தனியாா் பேருந்து ஓட்டுநா் அளித்த பொய் புகாா் அடிப்படையில் எனது கணவரை கைது செய்துள்ளனா். எனவே, கணவா் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கினை ரத்து செய்வதுடன், பொய் புகாா் அளித்த பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யாத காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டா வழங்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளைச் சோ்ந்த பொது மக்களும், கோயில் கட்டுவதற்கு இடையூறாக உள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணபதி, வரதராஜபுரம் பகுதி மக்களும் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com