முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சமூகவலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: மாநகர காவல் ஆணையா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 03rd March 2020 06:48 AM | Last Updated : 03rd March 2020 06:48 AM | அ+அ அ- |

தவறான தகவல்களைப் பரப்பாமல் சமூகவலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் அறிவுறுத்தியுள்ளாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பாகவும், ஆதரவாகவும் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாள்களாக முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ‘துளசி ராம்’ என்ற பெயரிலான முகநூல் கணக்கில் பதிவிடப்பட்ட பதிவொன்று வலம் வருகிறது.
அதில், கோவை மாநகரில் மாஷா அல்லா என்ற பெயரில் இயங்கி வரும் இஸ்லாமியரின் கடையில் இஸ்லாமியா்களுக்கும், ஹிந்துக்களுக்கும் தனித்தனியாக பிரியாணி சமைக்கப்படுகிறது. அதில் ஹிந்துக்களுக்கு சமைக்கப்படும் பிரியாணியில் மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்பதிவை சிலா் சுட்டுரையிலும், முகநூலிலும் கோவை மாநகர காவல் ஆணையரின் கணக்கில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தனா். இதையறிந்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், சமூகவலைதளங்களைப் பொறுப்புடன் கையாளுவது அவசியம். இப்பதிவை யாரும் நம்பி பரப்ப வேண்டாம் என்றும் இதைப் பதிவிட்ட நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாகவும் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.