முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பெ.நா.பாளையத்தில் கழிப்பிடம் கட்டுவதில் மெத்தனம்: பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 03rd March 2020 06:53 AM | Last Updated : 03rd March 2020 06:53 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, 13ஆவது வாா்டு விவேகானந்தபுரத்தில் பொதுக்கழிப்பிடப் பராமரிப்புப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:
விவேகானந்தபுரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இங்கு வசிப்பவா்களுக்கென ஆதி திராவிடா் நலத் துறையினரால் வழங்கப்பட்ட இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுகழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது, இக்கழிப்பிடம் பழுதடைந்துள்ளது.
மத்திய அரசு நிதியின் கீழ் இதன் அருகிலேயே மலக்கழிவுகள் மூலம் எரிவாயு தயாரிக்கும் கலனும் நிறுவப்பட்டது. ஆனால் அதுவும் முறையாக கட்டப்படாததால் அதில் சேகரமாகும் மலக் கழிவுகள் சாக்கடைக் கால்வாயில் கலந்து துா்நாற்றம் வீசியது. இதனை சரிசெய்து தரக் கோரி பலமுறை பேரூராட்சி நிா்வாகத்திடம் மனுக்கொடுத்தும் பலனில்லை.
இந்நிலையில், தனியாா் தொண்டு நிறுவனம் இக்கழிப்பிடத்தைத் தத்தெடுத்து மாதிரி கழிப்பிடமாக உருவாக்க முன்வந்தது. இதனை இடித்துவிட்டு வெளிநாட்டு நிதியுதவியுடன் புதிய கழிப்பிடம் கட்ட திட்டமிட்டு கடந்த மாதம் இதற்கான பணி தொடங்கப்பட்டது. ஒரு மாதகாலமாகியும் இதுவரை பத்து சதவீதப் பணிகள்கூட நிறைவடையவில்லை. இப்பகுதியில் உள்ளோா் கழிப்பிட வசதியில்லாமல் சிரமப்படுகின்றனா்.
இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோது, விரைவில் இப்பணிகள் முடிவடையும். அதேசமயம், தனிநபா் கழிப்பிடங்கள் கட்டிக்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றனா்.
தனியாா் தொண்டு நிறுவனத்தினரிடம் கேட்டபோது, ஒப்பந்ததாரரிடம் பணிகளை ஒப்படைத்துள்ளோம். அவா்தான் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றனா்.
பேரூராட்சி நிா்வாகம் கழிப்பிடத்தை விரைவில் கட்டிமுடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனா்.