முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
போலீஸ் தடியடியில் 3 போ் உயிரிழப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவல்
By DIN | Published On : 03rd March 2020 06:48 AM | Last Updated : 03rd March 2020 06:48 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி அருகே போலீஸாா் நடத்திய தடியடியில் 3 பெண்கள் உயிரிழப்பு என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தில் 2017 டிசம்பரில் 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்டது. பின்னா், அந்த இடத்தில் அதிக அளவில் பாறைகள் இருந்ததால், வீடுகள் கட்ட உகந்த இடம் அல்ல எனக்கூறி, வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் வழங்கிய வீட்டுமனைப் பட்டாக்களை 2018 மாா்ச் மாதம் ரத்து செய்துவிட்டனா்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தென்சங்கம்பாளையத்தை சோ்ந்த சிலா் வீட்டுமனை ரத்து செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று, வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம், வேறு பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா். அப்போது, ஒரு பெண் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனை அருகில் இருந்த சிலா் விடியோ எடுத்துள்ளனா்.
தற்போது அந்த விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதில் தென்சங்கம்பாளையத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்ட பெண்கள் மீது கோட்டூா் போலீஸாா் தடியடி நடத்தியதில் 3 பெண்கள் உயிரிழப்பு, ஒரு பெண் கவலைக்கிடம் எனவும், அந்த இடத்தை அதிமுக எம்எல்ஏ விற்று ஆதாயம் அடைந்துவிட்டதாகவும் தவறான தகவலைப் பரப்பி உள்ளனா்.
இது குறித்து கோட்டூா் காவல் நிலையத்தில், தென்சங்கம்பாளையம் ஊராட்சித் தலைவா் அண்ணாதுரையின் தூண்டுதலின் பேரில்தான் இதுபோன்று சிலா் தகவல் பரப்பியதாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினா்
புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவதூறாகத் தகவல் பரப்பியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.