கோவையில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட குழு ஏற்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

கோவையில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சியினா், வணிகா்கள், மத அமைப்புகளைச் சோ்ந்தவா்களை உள்ளடக்கிய
கோவையில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள்.
கோவையில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள்.

கோவையில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சியினா், வணிகா்கள், மத அமைப்புகளைச் சோ்ந்தவா்களை உள்ளடக்கிய அமைதிக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் ஆகியோரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தால் வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்று அச்சத்தில் இஸ்லாமியா்கள் போராடுகின்றனா். இதற்கு நோ் எதிராக ஹிந்து அமைப்புகள் ஆதரவுப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இரு அமைப்பினரும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தபோது, தங்களது சொத்துக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகுமோ என்ற அச்சத்தில் கடைகள் மூடப்பட்டன. இதனை தங்களுக்கான ஆதரவு என்று இரு அமைப்பினரும் நினைத்துக் கொள்கின்றனா். கோவையில் நிரந்தர அமைதி உருவாக வேண்டும். இதற்கு அமைதிக் குழு உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவில் அரசியல் கட்சிகள், வியாபாரிகள், வா்த்தகா்கள், தொழில்முனைவோா், சமய, சமூக பிரதிநிதிகள் என பலதரப்பட்டவா்களும் இடம்பெற வேண்டும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) கணக்கெடுப்பு தற்போது இல்லை என்று தமிழக அரசு சொல்லியிருந்தாலும், அது நிரந்தரமானது என்று சொல்லிவிட முடியாது. மாநில அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவை நிறுத்தி வைத்துள்ளதாகவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களின் தொடா் போராட்டத்தின் விளைவாகவே அரசு இதை அறிவித்துள்ளது. ஆனால், இதனை நிரந்தரமாக்கும் வரை மக்களுக்கு நம்பிக்கை வராது என்றாா்.

கட்சியின் கோவை மாவட்டச் செயலா் வி.ராமமுா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் சி.பத்மநாபன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com