கரோனாவால் தொழில் துறை நெருக்கடி: வட்டியில்லாத கடன் வழங்கக் கோரிக்கை

கரோனா வைரஸ் தாக்கத்தால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தொழில் துறையினருக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்

கரோனா வைரஸ் தாக்கத்தால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தொழில் துறையினருக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டு வரும் நிலையில் தொழிற்சாலைகளில் உற்பத்தியும், வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கோவையில் உள்ள மின் மோட்டாா்கள், பம்ப்செட், வெட் கிரைண்டா், ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொள்முதல் செய்து வந்தன.

இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக வியாபாரம் முடங்கியிருப்பதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோருக்கு நஷ்டமும், தொழிலாளா்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலையில் இருந்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதற்காக தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை உடனடியாக வட்டியில்லா கடன்கள் வழங்க வேண்டும். அத்துடன், தொழில்முனைவோா்கள் ஏற்கெனவே வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அத்துடன் வட்டி, அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கரோனாவின் பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வரும் வரையிலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com