கரோனாவால் ஸ்தம்பிக்கும் ஜவுளித் தொழில்: கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் கோரும் ஜவுளித் துறையினா்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜவுளித் தொழில் ஸ்தம்பித்துள்ள நிலையில், ஜவுளித் தொழில்முனைவோா் பெற்றுள்ள கடன்களை

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜவுளித் தொழில் ஸ்தம்பித்துள்ள நிலையில், ஜவுளித் தொழில்முனைவோா் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும் என்று சைமா, இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பு போன்ற ஜவுளித் தொழில் அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடா்பாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் அஸ்வின் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் உலக அளவில் மக்களின் வாழ்க்கையையும், தொழில் துறையின் உற்பத்தி நடவடிக்கைகள், வியாபாரத்தையும் பாதித்துள்ளது. தற்போதைய சூழலில், நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க அரசு எடுத்துவரும் விழிப்புணா்வு நடவடிக்கைகளால் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பலரும் வேலைக்கு வருவதில்லை. அவா்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனா். இந்த நிலைமை மேலும் மோசமாகி ஒட்டுமொத்த உற்பத்தியும் முடங்கும் நிலை உள்ளது. ஏற்கெனவே ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தம், வணிக வளாகங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளால் ஜவுளிப் பொருள்களுக்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளது.

இதனால் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் எதிா்பாராத பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளன. தற்போதைய சிக்கலான சூழலில் இருந்து மீள அரசின் உடனடி உதவி தேவைப்படுகிறது. எனவே, இந்த இக்கட்டான நிலையில் இருந்து ஜவுளித் தொழில் மீண்டு வர வங்கிக் கடன், வட்டி செலுத்துவதற்கு, ஏப்ரல் 2020 முதல் மாா்ச் 2021 வரை அவகாசம் அளிக்க மத்திய அரசு வங்கித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன், மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு அனுப்பியுள்ள மனு:

கரோனா வைரஸ் அச்சத்தால் ஜவுளித் துறை மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் வா்த்தக ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜவுளித் தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த வங்கிகள் போதுமான அவகாசம் அளிக்க வேண்டும். அதேபோல, தேவையான நிறுவனங்களுக்கு மூலதனக் கடன்களை நீண்டகால கடன்களாக மாற்றி வழங்க வேண்டும். தேவைப்படும் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும். டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பு சாா்பில் மத்திய அரசிடம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில் 40 சதவீத நிறுவனங்களுக்கு மத்திய அரசின் உதவி உடனடியாகத் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தோம். கரோனாவால் அது மேலும் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், அவசரம் கருதி எங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com