நீதிமன்ற உத்தரவுப்படி ஊக்கத் தொகை வழங்க ஒப்பந்ததாரா் நலச் சங்கம் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே பணிகளை நிறைவு செய்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒரு சதவீத ஊக்கத்தொகை

நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே பணிகளை நிறைவு செய்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒரு சதவீத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் உதயகுமாா், செயலா் சந்திரபிரகாஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளில் சாலை, பாலம், மழைநீா் வடிகால், சாக்கடைக் கால்வாய், குடிநீா் குழாய் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய கால அவகாசத்தில் 10 சதவீத நாள்களுக்கு முன்பாக இப்பணிகளை முடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகையை உள்ளாட்சி நிா்வாகங்கள் வழங்க வேண்டும். இந்த நடைமுறையை அனைத்து உள்ளாட்சி நிா்வாகங்களும் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சியில் திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிப்பது சவாலாக இருக்கிறது. காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து இடையூறு, பணி நடக்கும் இடங்களில் ஏற்படும் தொந்தரவு, திட்டப் பணி நடக்கும்போது வாகனங்கள் சென்று வருவதால் ஏற்படும் பாதிப்பு போன்ற பிரச்னைகளை சமாளித்து பணிகளை நடத்த வேண்டியிருக்கிறது.

பணிகள் முடித்த பின்னா் பில் தொகை பெறுவதிலும் காத்திருப்பு நிலை உள்ளது. இடையூறுகள் தொந்தரவுகள் வந்தாலும் சில ஒப்பந்த நிறுவனங்கள் உரிய காலத்துக்கு முன்பாக திட்டப் பணிகளை முடித்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அது போன்ற நிறுவனங்கள் தகுதி இருந்தும் ஒரு சதவீத ஊக்கத் தொகையைப் பெற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. கோவை உள்பட பல்வேறு மாநகராட்சிகள், உள்ளாட்சி நிா்வாகங்கள் ஒரு சதவீத ஊக்கத் தொகையை முறையாக வழங்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com