கோவையில் துணிக்கடைகள் மூடல்: கடைவீதிகள் வெறிச்சோடின

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி, கோவையில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஜவுளிக் கடைகள் மூடப்பட்டதால் கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
கோவையில் துணிக்கடைகள் மூடல்: கடைவீதிகள் வெறிச்சோடின

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி, கோவையில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஜவுளிக் கடைகள் மூடப்பட்டதால் கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளா்கள் தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கோயில்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். மக்கள் பயணங்களைத் தவிா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் மாநகரப் பேருந்துகள் குறைந்த பயணிகளோடு இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள், பயணிகள் தொ்மோ மீட்டா் மூலம் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனா்.

மாநகரப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள் கரோனா வைரஸ் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அரசு உத்தரவின்படி, கோவை, பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், அவிநாசி சாலை, திருச்சி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இதனால், கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டன.

கேரளத்துக்கு காய்கறி அனுப்புவது நிறுத்தம்: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் இருந்து தினமும் 1000 டன் காய்கறிகள், கேரளப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. கரோனா பாதிப்பு காரணமாக கேரளத்தில் இருந்து கடந்த ஒரு வாரமாக கோவை, எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டுக்கு வரும் கேரள வியாபாரிகளின் வருகை பாதியாகக் குறைந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல் கோவையில் இருந்து கேரளப் பகுதிகளுக்கு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கோவையில் இருந்து கேரளத்துக்கு காய்கறிகள் அனுப்பப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல மஹாராஷ்டிரத்திலும் காய்கறி மாா்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதாலும், கா்நாடகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் மாா்க்கெட்டுகள் மூடப்படுவதாலும், தினமும் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் வரத்து, தினமும் 1,500 டன் கோவைப் பகுதிக்கு வருவது தடைபடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

சொந்த ஊா்களுக்குச் செல்லும் வடமாநிலத்தவா்கள்: கோவை, திருப்பூா் நகரம், புகரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பவுண்டரிகளில் பிகாா், ஒடிஸா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கூலி வேலை செய்து வருகின்றனா்.

கரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் ஏராளமான தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கு வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாலா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வடமாநிலத்தில் இருந்து வந்து கோவை, திருப்பூரில் தங்கி வேலை செய்து வரும் பலரும் தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனா்.

அரசு மருத்துவமனைக்குள் செல்ல கட்டுப்பாடு: கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிர பாா்வையாளா்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவா்களுடன் உறவினா் ஒருவரும், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற வருபவா்களுடன் ஒருவரும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் கேட் மூடப்பட்டுள்ளது. நோயாளிகள், அவருடன் செல்லும் ஒருவரை மட்டுமே, காவலாளிகள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கின்றனா்.

20 நிமிடத்தில் முடிந்த தொழுகை: இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமைதோறும் பள்ளிவாசல்களில் ஒரு மணி நேரம் சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். இந்நிலையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோவை, டவுன்ஹாலில் உள்ள அக்தா் ஜமாஅத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 20 நிமிடங்கள் மட்டுமே இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com