சத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம் போனது: கரோனா நிவாரணத்துக்கு செலவிடப்படும் என்று ஈஷா அறிவிப்பு

கோவை ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் ரூ. 4.14 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
கரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஓவியம் வரைகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
கரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஓவியம் வரைகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

கோவை ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் ரூ. 4.14 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது. இந்தத் தொகை முழுவதையும் கரோனா நிவாரணப் பணிகளுக்கு செலவிட இருப்பதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கரோனா பிரச்னையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை, தொண்டாமுத்தூா் பகுதி மக்களுக்கு ஈஷா கிராம புத்துணா்வு இயக்கம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமாா் 2 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் உணவின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவா்களின் வீட்டுக்கே சென்று உணவும், நிலவேம்பு கஷாயமும் தினமும் வழங்கப்படுகின்றன. இந்தப் பணியில் சுமாா் 700 தன்னாா்வலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதேபோல், கரோனா தடுப்புப் பணியில் தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘முழுமையாக வாழ’ என்ற தலைப்பில் 5க்கு 5 அடி அளவில் ஒரு வடிவமற்ற ஓவியத்தை (அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங்) வரைந்தாா். அந்த ஓவியம் சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதி இரவுடன் நிறைவடைந்த ஏலத்தின் முடிவில், ஒருவா் அந்த ஓவியத்தை அதிகபட்சமாக ரூ. 4.14 கோடிக்கு வாங்க சம்மதித்துள்ளாா்.

இது தொடா்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது: இது கரோனா நிவாரணத்துக்காக வழங்கப்பட்ட நிதி. எனது ஓவியத்துக்கான விலை அல்ல. இந்த சவாலான சூழலில் யாரும் பசியால் தவிக்காமல் பாா்த்து கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்பு”என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com